பத்மாவதி படத்தில் நடித்ததால் மிரட்டலுக்கு உள்ளாகியுள்ள நடிகை தீபிகா படுகோனுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளை நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். மேலும் பல தலைவர்கள் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.
ராஜபுத்திர ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை தவறாக சித்தரிப்பதாகக் கூறி அந்த படத்தை தடை செய்ய ராஜபுத்திர இனத்தவர்களும் இந்து அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த படத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் அவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக ஊடக பிரிவு தலைவர் சூரஜ் பால் அமு பத்மாவதியாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகை தீபிகாபடுகோன் மற்றும் அந்த படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலையை வெட்டிக் கொண்டுவருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜகவிலிருந்தும் சூரஜ் பால் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நடிகை தீபிகாபடுகோன் தலைக்கும், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தலைக்கும் விலை வைத்த சூரஜ் பால் அமுவுக்கு இந்தி திரையுலக நட்சத்திரங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பத்வமாதிவதி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் ஷாகித் கபூரும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். சூரஜ் பால் அமு மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு ஹரியானா காவல்துறையை அறிவுறுத்தியுள்ள தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமுவுக்கு சம்மனும் அனுப்பியுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், தீபிகாபடுகோன் தலையையும் அவருக்கான கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தன்னுடைய படங்களுக்கும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதாக குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன் தீவிரவாதத்தை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். அறிவார்ந்த இந்தியா விழித்தெழ வேண்டிய நேரம் இது என்றும் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இதற்கிடையே நடிகை தீபிகா படுகோனுக்கு மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டாரை தீபிகாபடுகோனின் சொந்த மாநிலமான கர்நாடகாவின் முதல்வர் சித்தராமைய்யா வலியுறுத்தியுள்ளார். தீபிகாபடுகோனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தங்கள் மாநிலம் சார்பில் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.