ஓ.பன்னீர்செல்வத்தை பாஜகவுடன் நெருங்க வைத்து… பின்னர் அவரை எடப்பாடி தரப்போடு இணைய வைத்து… என ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் அரங்கேறிய அடேங்கப்பா காட்சிகளுக்கெல்லாம் பின்னணியில் இருந்து பெரும் முயற்சி எடுத்தவர் மைத்ரேயன் என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று. அடிப்படையில் மைத்ரேயன் ஓர் ஆர்எஸ்எஸ் தொண்டர் என்பதுடன், கடந்த 2000 வரை பாஜகவில் பல பதவிகளை வகித்தவர். இதனால், வடிகட்டிய அதிமுக காரராகவும், ஜெயலலிதா விசுவாசியாகவும் இருந்த பன்னீர்செல்வத்தை பாஜக செல்வமாக மாற்றுவதில் மைத்ரேயனுக்கு பெரிய சிரமம் எதுவும் இருக்கவில்லை. எல்லாம் சரி… இப்போது மதுரையில் முப்பெரும் விழாவுக்கு பன்னீர்செல்வத்தை அழைக்காமல் விட்டுவிட்டார்களே பாவிகள் என வேதனைப் படுகிறார் மைத்ரேயன். அவர் ஆத்திரத்திலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது!
இதன் எதிரொலியாக ஆளுநர் மாளிகைக்கு திடீரென சென்ற அதிமுக எம்.பி. மைத்ரேயன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து பேசினார். ஆனால் ஆளுநரை ஏதோ தமிழிசை விழா தொடர்பாக தாம் சந்தித்ததாக அவர் கூறினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மைத்ரேயன் கூறியதாவது:
டிச.21இல் நடைபெற உள்ள தமிழிசை சங்கத்தின் 75வது ஆண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக ஆளுநரை சந்தித்தேன். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. மதுரை முப்பெரும் விழா நடத்தப்பட்டது எங்களுக்கு சற்று நெருடலாகத்தான் உள்ளது. எங்களுக்கு தகவல் கொடுக்காமல் நடத்தப்பட்டது ஆதங்கமாக உள்ளது.
பழைய விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். முப்பெரும் விழாவிற்கு கட்சியில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும்.
மதுரையில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு மதுரை எம்.பி. கோபாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. மதுரை சட்டசபை தொகுதி உறுப்பினர் சரவணனுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இவர்கள் இருவரும் பன்னீர்செல்வம் அணியில் இருந்தவர்கள். இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். வருங்காலம் வசந்தகாலமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தினார் மைத்ரேயன். ஆக… இரட்டை இலையைக் கொடுத்து இரண்டே நாட்களில் அதைக் கிழிச்செறிஞ்சுருவாங்க போருக்கே என்று பதறுகின்றனர், உண்மையான அதிமுக தொண்டர்கள்…
Maitreyan Disappointed with EPS group