அசோக்குமார் தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்த மனுவில், அசோக்குமாருக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், சசிகுமாருடன் மட்டுமே கொடுக்கல் வாங்கல் வைத்திருந்ததாகவும் அன்புச்செழியன் தெரிவித்திருந்தார். அசோக்குமார் தற்கொலைக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால், தமக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் எனவும் அதில் அன்புச்செழியன் தரப்பில் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்புச்செழியனின் மேலாளர்கள் முருகன் , சாதிக்பாட்சா இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அன்புச்செழியன் மற்றும் அவர்கள் மேலாளர்கள் இருவர் ஆகிய மூவர் மீதும் கந்துவட்டிக் கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன்ஜாமீன் மனுவை அன்புச்செழியன் வழக்கறிஞர் இன்று வாபஸ் பெற்றார்.