‘ஒக்கி’ புயல் பாதிப்பு – போர்க்கால அடிப்படையில் நிவராணப் பணிகள் : தமிழக அரசு


கன்னியாகுமரி தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் புயல் காற்றினால் விழுந்த 579 மரங்களில் 329 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் 2000 ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

‘ஒக்கி’ புயல் சேதம் தொடர்பாக அரசின் சார்பில் நடைபெற்று வரும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”’ஒக்கி’ புயலினால் தென் தமிழ்நாட்டின் அநேக இடங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில், பலத்த காற்றுடன் மிக கன மழை பெய்துள்ளது.

தமிழக முதல்வர் பழனிசாமியின் உத்தரவின் பேரில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், டி.கே.இராமச்சந்திரன், இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்டத்தில் குமார் ஜெயந்த், இ.ஆ.ப., திருநெல்வேலி மாவட்டத்தில் முனைவர் ராஜேந்திரகுமார், இ.ஆ.ப., ஆகியோர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைத்து செயலாற்றி வருகின்றனர்.

முதல்வரின் ஆணைப்படி மேற்கூறியவர்களுடன் இணைந்து, மின் சாதனங்கள் மற்றும் மின் உள்கட்டமைப்புகளை சீரமைக்கும் பணிகளை நேரில் சென்று துரிதப்படுத்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணியும் இன்று கன்னியாகுமரிக்கு விரைந்துள்ளார்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவை கருத்தில் கொண்டு கூடுதலாக முனைவர் ராஜேந்திர குமார், இஆப., ஜோதி நிர்மலாசாமி, இஆப., சமீரன், இஆப., ஆகியோரை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ‘ஒக்கி’ புயலின் காரணமாக பாதிப்படைந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து தலைமைச் செயலர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

முதல்வர் பழனிசாமி உத்தரவின் பேரில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 நிவாரண முகாம்களில் 1044 பேர்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 2 முகாம்களில் 205 பேர்களும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையினால் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவ சேவையாற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தவிர, கூடுதலாக 28 நடமாடும் சிறப்பு மழைக்கால மருத்துவ குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்கி வருகின்றன.

இந்த நடமாடும் மழைக்கால மருத்துவ வாகனத்தில் தேவையான அளவு மருந்துகள், மாத்திரைகள், சிரப்பு மற்றும் களிம்புகள் ஆகியவை இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப இந்த முகாம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தண்ணீர் மூலம் பரவும் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்படாதிருக்க பொது சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணிக்கவும், குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிக்கப்படுவதை சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குளோரின் பரிசோதனை குழுக்கள் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 குளோரின் பரிசோதனை குழுக்கள் செயல்படுகின்றன. டேங்கர் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரிலும் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிகப்படுவதை உறுதி செய்ய முதல்வர் அறிவுறுத்தினார்.
மழையின் போதும், மழைக்குப் பின்பும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார ஆலோசனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கவும், நடமாடும் சிறப்பு மருத்துவ குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.

உணவு பாதுகாப்புத் துறையினரால் தங்கும் மற்றும் உணவு விடுதிகளில் சுகாதாரம் பேணப்பட்டு பாதுகாப்பான குடிநீர் மற்றும் உணவு வகைகள் வழங்குவதை உறுதி செய்யவும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான அனைத்து மருந்துகளும் போதுமான அளவு இருப்பில் வைக்கவும், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் மின் விநியோகம் தடையில்லாமல் கிடைக்க ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டார்.

மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பிளீச்சிங் பவுடர் கிருமி நாசினி தண்ணீர் வடிந்த இடங்களில் தெளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். புயல் காற்றினால் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 579 மரங்கள் விழுந்துள்ளன. அவற்றில் 329 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் விழுந்த அனைத்து மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.

மாநில நெடுஞ்சாலைகளில் விழுந்த மரங்கள் இன்று மாலைக்குள் அகற்றப்பட்டுவிடும். மீதமுள்ள மரங்களை துரிதமாக அகற்றுமாறு ஆணையிடப்பட்டுள்ளது. இந்த சீரமைப்புப் பணிகளில் 45 ஜே.சி.பி. மற்றும் 188 மின் ரம்பங்கள், நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, 15க்கும் மேற்பட்ட பொறியாளர்களும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மின் தடை உள்ள பகுதிகளில் குடிநீர் தடையின்றி விநியோகம் செய்வதற்கு ஏதுவாக பிற மாவட்டங்களிலிருந்து சுமார் 100 டீசல் ஜெனரேட்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள 200 நபர்கள் அடங்கிய 7 மாநில பேரிடர் மீட்புக் குழுக்களும், 60 நபர்கள் அடங்கிய இரண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களை போர்க்கால அடிப்படையில் மீட்டு வருகின்றனர்.

மரங்கள் சாய்ந்து பாதிக்கப்பட்ட 110 கி.வா. திறன் கொண்ட 11 துணை மின் நிலையங்களின் மின் சேவைகள் நிறுத்தப்பட்டன. மேலும், 4000 உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் கம்பங்கள், 30 மின் மாற்றி கட்டமைப்புகள் மற்றும் 50 கி.மீ. மின் கம்பிகள் சேதம் அடைந்துள்ளன. அவற்றை உடனே சீர்செய்ய 15 தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, சுமார் 2000 தொழிலாளர்கள் இப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது 5 உயர் அழுத்த துணை மின் நிலையங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீதமுள்ள 6 உயர் அழுத்த துணை மின் நிலையங்கள் இன்று இரவுக்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். தேவையான மின் கம்பங்கள், மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பிகள் அனைத்தும் கையிருப்பில் உள்ளன. எனவே, ஓரிரு நாட்களில் அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சார விநியோகம் வழங்கப்படும்.

கடலுக்குள் 29 படகுகளில் 106 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை மற்றும் கடலோர காவல் படையினர் இணைந்து 18 படகுகளில் இருந்த 76 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். மீதமுள்ள 11 படகுகளில் இருக்கும் 30 மீனவர்களை துரிதமாக மீட்க தமிழக முதல்வர் அறிவுறுத்தினார். கடலோரக் காவல் படையின் இரண்டு கப்பல்களான ‘வைபவ்’ மற்றும் ‘ஆதேஷ்’ ஆகியன இப்பணியில் ஈடுபட்டுள்ளன.

பலத்த மழையின் காரணமாக இம்மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. எனவே, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக, கரைகள், மதகுகள் மற்றும் கதவுகளை ஆய்வு செய்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதை மீண்டும் வலியுறுத்தியும், சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் களப் பணியாளர்கள் முழுவீச்சில் இதனை கண்காணிக்கவும் தமிழக முதல்வர் வலியுறுத்தினார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு அறையிலுள்ள அலுவலர்கள் இந்திய வானிலை ஆய்வு மையத்துடன், உடனுக்குடன் தொடர்பு கொண்டு, புயல் மற்றும் மழை பற்றிய உண்மை நிலையினை அறிந்து, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கவும், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் எடுக்கவும் முதல்வர் வலியுறுத்தினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஒபாமா சந்திப்பு..

ஜீன்ஸ்-க்கு தடை: கேரள மாணவிகள் கைலி அணிந்து போராட்டம்..

Recent Posts