மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திய இந்தியப் பிரதமர் வி.பி.சிங்கை பாபர் மசூதி கட்டுவதற்கான ரதயாத்திரையின் பெயரால் எதிர்த்தது பாரதிய ஜனதா கட்சி. 1990ஆம் ஆண்டு நவம்பர் 7ந் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரினார் வி.பி.சிங்.
அவரது அரசுக்கு ஆதரவாக 142 வாக்குகள் மட்டுமே பதிவாயின. எதிராக (பா.ஜ.க+காங்கிரஸ் உள்பட) 346 வாக்குகள் பதிவாயின. சமூக நீதியை நடைமுறைப்படுத்தவும், மதச்சார்பின்மையைக் காக்கவும் முயன்றவரின் தலைமையிலான தேசிய முன்னணி அரசு 11 மாதங்களிலேயே கவிழ்ந்தது.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரி வி.பி.சிங் ஆற்றிய உரையில் சமூக நீதியின் அவசியத்தை அவர் அழுத்தமாக வலியுறுத்தினார். அப்படிப் பேசும்போதெல்லாம் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகியோரது பெயர்களை உச்சரித்தார். “என் கால்கள் உடைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நான் அடையவேண்டிய லட்சியத்தை அடைந்துவிட்டேன். மரியாதையோடு ஆட்சியை விட்டு நாங்கள் வெளியேறுகிறோம். அதற்காகப் பெருமைப்படுகிறோம்.
அரசியல் நாள்காட்டிகளில் கடைசித் தேதி என்று எதுவும் கிடையாது” என உறுதியாகத் தெரிவித்துவிட்டு, தோல்வியைத் துணிச்சலாக எதிர்கொண்டார். ஒரு வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன் வருவதுபோல, சமூக நீதிக்காகவும் மதச்சார்பின்மைக்காகவும் பிரதர் பதவியைத் துறந்துவிட்டு நாடாளுமன்றத்திலிருந்து கம்பீரமாக வெளியே வந்தார் வி.பி.சிங்.
பதவியை இழந்தபிறகும் அவரைப் பிரதமராகவே பார்த்த முதல் மாநிலம் தமிழகம்தான். சமூக நீதிப் போரில் அவர் பதவி இழந்த நான்காம் நாளே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, டெல்லி சென்று வி.பி.சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தமிழக முதல்வராக இருந்த கலைஞர், சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்கை அழைத்துக்கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய ஏற்பாடு செய்தார்.
தனது பிறந்த மண்ணுக்கு வருவது போன்ற ஆர்வத்துடன் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்துக்கு வந்தார் வி.பி.சிங். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தது கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு. பதவியில்லாத ஒரு மாமனிதருக்கு இத்தகைய வரவேற்பு என்பது அதுவே முதல்முறை.
1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடெங்கும் ஏற்படுத்தப்பட்ட மத வெறி வன்முறைகளுக்கு எதிராக தொடர் உண்ணாவிரதம்ட இருந்த வி.பி.சிங்கின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறுநீரகங்கள் செயலிழந்தன. அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். தமிழர்கள் பலர் அவருக்குத் தங்களின் சிறுநீரகத்தைத் தர முன்வந்தனர்.
ஒரத்தநாட்டை சேர்ந்த திராவிடர் கழக இளைஞர்கள் இதில் முன்னின்றனர். ஆனால் வி.பி.சிங், “வாழவேண்டிய இளைஞர்களின் சிறுநீரகத்தைப் பெற்று நீட்டித்துக் கொள்ள விரும்பவில்லை. என் மீது அன்பு கொண்டு சிறுநீரகம் தர முன்வந்த பெரியார் இயக்கத்து இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த பிறவி என ஒன்றிருந்தால் நான் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன்” என்றார் இதயம் நெகிழ.
மாற்று சிறுநீரகம் பொருத்திக்கொள்ளாமல் ரணவேதனையான டயாலிஸிஸ் சிகிச்சை முறையிலேயே 15 ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்த சமூகநீதிக் காவலர் வி.பி.சிங், 2008ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள் காலமானார்.
(வி.பி.சிங் நினைவு நாள்)
Hero of social justice V.P. Singh: Kovi Lenin
முகநூல் பதிவில் இருந்து….