ஜெயலலிதா எனும் அவர்…! : செம்பரிதி

 “ஜெயலலிதா எனும் நான்…” என்ற அந்தக் குரல், ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியின் மீது நம்பிக்கையும், பிடிப்பும் கொண்ட எவருக்கும், புளகாங்கிதத்தையோ, உற்சாகத்தையோ தரக் கூடியது அல்ல. மாறாக, இனம் புரியாத கலக்கத்தையும், நம்பிக்கை இன்மையையுமே அது பரவச் செய்தது.

அவர் மரணம் பற்றிய சந்தேகம், அவர் டிசம்பர் 5ஆம் தேதிதான் மறைந்தாரா, அல்லது எப்போதோ இறந்து அன்று அறிவிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கெல்லாம் இதுவரை நம்மிடம் பதில் இல்லை. இனியும் அது கிடைக்குமா என்பதற்கும் உத்தரவாதமில்லை. அந்த உண்மை அவரைச் சுற்றி இருந்த  கும்பலில் யாரோ ஒருவருக்குத் தெரிந்திருக்கலாம். அவரது வாழ்வைப் போலவே மரணத்தின் தன்மையும் கூட புதிரான வசீகரமாகவே முடிந்துவிட்டது. போயஸ் தோட்டம் ஒரு மர்ம மாளிகை என விசிக தலைவர் திருமாவளவன் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வருகிறது. மக்கள் தலைவர்களாக இருக்க விரும்புவோர் செய்யக் கூடாத தவறு தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்வது. அதை தொடக்கத்தில் இருந்தே ஜெயலலிதா செய்து வந்தார்.

தனக்கென்று ஒரு குடும்பம் இல்லாதவர் இத்தனை பெரிய ஆடம்பரமான வாழ்வை வாழ்ந்ததற்கான காரணம், அவர் ஒரு திரைப்பட நடிகை என்ற உளவியலாக இருக்கலாம். ஆனால், அரசியல் வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட பின்னரும் அதைத் தொடர்ந்ததால் வந்த வினைகள் தான், அவரும், அவரை நம்பி வாக்களித்த கணிசமான மக்களின் மடமையால் இ்ந்த நாடும் சந்தித்த, சந்தித்துவரும் அனைத்து அவலங்களுக்கும் காரணம்.

ஜெயலலிதாவின் வசீகரத்தை, ஒரு ஜனநாயக விபத்தால் நேர்ந்த பயங்கரம் என்றே சித்தரிக்கலாம்… வசீகரத்தின் வழியாக, எதிர்க்க முடியாத வலிமையைப் பெறும் வித்தையை, எம்ஜிஆரிடம் இருந்து மிகத் தெளிவாகவே கற்றுவைத்திருந்தார் ஜெயலலிதா. அதனால்தான், 1987ல் எம்ஜிஆர் மறைந்த இரண்டு ஆண்டுகளிலேயே அதிமுகவையும், அதன் இரட்டைஇலைச் சின்னத்தையும் கைப்பற்றி, அவற்றைத் தனது அடையாளமாகவும் அவரால் நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது. அதிமுகவில் தற்போது இருப்பவர்களை விட பல மடங்கு வலிமையும், சூழ்ச்சியும் கொண்ட விலாங்குமீன் தலைவர்கள் அப்போது இருந்தனர். திராவிட இயக்கத்தினரால் நாவலர் எனப் போற்றப்பட்ட நெடுஞ்செழியன், எம்ஜிஆரின் வாழ்நாள் வலதுகரமான ஆர்எம்.வீரப்பன், எஸ்.டி.சோமசுந்தரம், திருநாவுக்கரசு(சர்), கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சசந்திரன் என அந்தப் பழம்பெரும் பட்டியல் நீளமானது… அத்தனை தலைகளையும் உருட்டிவிட்டு, அரியாசனத்தில் அமர்ந்த ஜெயலலிதாவின் வலிமையை, குறைவாக மதிப்பிட்டதுதான் கலைஞர் கருணாநிதி செய்த மிகப்பெரிய வரலாற்றுத் தவறு!

தம்பி வா தலைமை ஏற்க வா என்று அண்ணாவால் அழைக்கப்பட்ட நெடுஞ்செழியனை, ‘உதிர்ந்த மயிர்’ எனக் கூறிய போதே, எத்தனை பெரிய மனிதரையும் உதாசீனப் படுத்தத் தயங்காதவர் ஜெயலலிதா என்ற தனது ஆணவம் சார்ந்த அடையாளத்தை, அரசியல் புள்ளிகள் அனவைருக்கும் அவர் உணர்த்தி விட்டார். ஜெயலலிதாவின் இத்தகைய அதிரடியான பேச்சும் போக்கும்தான், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதிவரை, அதிமுகவில் அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை, அனைவரையுமே முகமும், குரலும் அற்ற அடிமைகளாக கட்டிப்போட்டிருந்தது. ஜெயலலிதா இருக்கும் போது, ஓ.பன்னீர்செல்வத்தின் குரலைத் தவிர வேறுயாருடைய குரலையாவது நாம் கேட்டதுண்டா…. சசிகலாவின் குரலும், பேச்சும் எப்படி இருக்கும் என்று காட்டுவதற்காக நமது ஊடகங்கள் காட்டிய பரபரப்பும், போட்டியுமே, ஜெயலிலதாவின் கட்டுப்பாட்டில் இருந்த அதிமுக குறித்த புரிதலுக்கு போதிய சான்று!

ஆக, வசீகரம் என்பதை விட வலிமை என்பதே காலப்போக்கில் ஜெயலலிதாவின் அரசியல் அடையாளமாக பரிணமித்து நின்றது. கூடுதல் குண அடையாளமாக பிடிவாதமும் சேர்த்தே சித்தரிக்கப்பட்டது. 1991ல் அவர் ஆட்சியில் அமர்ந்த பின்னர், இதுபோன்ற அவரது குணச்சாயல்கள் அழுத்தமாக வெளிப்படத் தொடங்கின.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜெயலலிதா செய்த அரசியல் தவறுகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆடம்பரத் திருமணமாகட்டும், அதிரடி கைதுகளாகட்டும், முரண்பட்டு பேசுவதாகட்டும் எல்லாமே ஜெயலலிதாவின் வெளிப்படையான தவறுகள். தாம் செய்வது எத்தகைய தவறு என்பதை உணராமலேயே அவர் பல செயல்களைச் செய்திருக்கிறார் என்பதற்கு, அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஓர் அழுத்தமான உதாரணம். ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த தொடக்க காலம் என்பதால், பின்னாளில் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதைக் கணிக்காமலேயே அவர் சில மோசமான தவறுகளைச் செய்துள்ளார். அவரது ஆயுட்காலம் முழுக்க அந்தத் தவறுகள் அவரைத் துறத்தத் தவறவில்லை. 

கலைஞரின் மீது எம்ஜிஆரின் துணையுடன் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட எதிர்மறைக் கருத்தியல், ஜெயலலிதா என்ற பிம்ப அரசியலுக்கு அசைக்க முடியாத அடித்தளத்தைப் போட்டுத் தந்துவிட்டது.

கலைஞரை எதிரியாக சித்தரித்தே தங்களது வாழ்வை வளமாக்கிக் கொண்ட கூட்டத்துக்கு ஜெயலலிதா கற்பக விருட்சமாக நிழல்தந்து  நின்றார். அதற்கு விலை என்ன தெரியுமா… தமிழகத்தின் கால் நூற்றாண்டுகால அரசியல் சீரழிவு.

ஒரு சமூகத்தை இத்தனை பெரிய சீரழிவுக்கு ஆளாக்கியதற்கான சிறு குற்ற உணர்ச்சி கூட ஜெயலலிதாவை ஆதரித்தவர்களுக்கும் இல்லை. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற பெயரில் அறிவுசார் நாணம் சிறிதுமின்றி அதற்கு ஒத்துழைத்த பத்திரிகை, ஊடக உலகத்தினருக்கும் இல்லை. இருந்தால், எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும், ஜெ.தீபாவுக்கும், விஷால் என்ற விடலைக்கும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது ஊடக விளக்கைப் பிடிப்பார்களா?

ஜெயலலிதாவின் இறுதிக் காலத்தில் அவருக்கே உரித்தான பிடிவாத குணத்தால், தமிழகம் சார்ந்த உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் மத்திய அரசிடம் மல்லுக்கட்டினார் என்பது மட்டும்தான், அவரது அரசியல் வாழ்க்கையில் எஞ்சிய சிறுபலன்.                                                

எனினும், ஜெயலலிதாவின் பெரும்பாலான அரசியல் தவறுகள் அவரை முழுமையாக ஏற்றுக்கொள்வதில், அழுத்தமான மனத்தடையை ஏற்படுத்துவது இயல்பானது, தவிர்க்க முடியாததும் கூட.

தமிழகத்தில் திராவிட இயக்கம், அதன் முழுமையான உள்ளீட்டு வீரியத்தோடு ஆட்சி நடத்திய காலம் என்பது மிகவும் குறைவானது. அண்ணா முதலமைச்சராகி குறுகிய காலத்திலேயே மறைந்து விட்டார். அடுத்து கட்சிக்கும், ஆட்சிக்கும் கலைஞர் தலைமையேற்றார். அந்தக் காலக்கட்டத்தில் தான் திமுகவின் வேலைத்திட்டங்கள் பலவற்றை சட்டமாக்க முடிந்தது. அதன் பிறகு நெருக்கடி நிலையில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திராவிட இயக்கத்தின் கோட்பாட்டு எதிரிகளோடு, பிழைப்பு வாத அரசியல் எதிரிகளும் கைகோர்த்தனர். அதற்கு மிகப் பொருத்தமான கருவியாக எம்ஜிஆர் பயன்பட்டார். சுத்தத்திற்கு எதிர்ப்பதம் அசுத்தம் என்பது போல், திமுகவுக்கு எதிராக அதிமுக உருவானது.  எம்ஜிஆர் தன்னியல்பிலேயே ஒரு காங்கிரஸ் காரர் என்பதால், திராவிட இயக்கத்தின் காத்திரமான தத்துவார்த்தப் பிடியில் இருந்து நழுவுவதிலும், வழுவுவதிலும் அவருக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. அதன் வடிவம்தான் அதிமுக. ஆம், கட்சியின் பெயரில் மட்டும் அண்ணா இருந்தார். சினிமா வசீகரத்திற்கு முன்னால் சிந்தனை வசீகரம் மக்களிடம் எடுபடாமல் போனதில் வியப்பில்லை. எம்ஜிஆர் மறைந்த பின்னர் 13 ஆண்டுகள் கழித்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இதை ஏதோ தமிழகத்தின் பெருமையாக பலர் பேசுவதுண்டு. ஆனால், ஒருவிதமான மாயை அரசியலுக்குள் தமிழகம் சிக்குண்ட காலம் அது என்பதை அவர்கள் உணர்வதில்லை. தமிழகத்தில் அரசியல்  என்பது கொள்கை எதுவுமற்ற சாக்கடையாக குழப்பியடிக்கப்பட்ட காலம் தான் அந்த 13 ஆண்டுகள். கலைஞரை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் அனைவரும் தமிழகத்தின் அத்தகைய அரசியல் பேரழிவுக்கு துணை போயினர். அதன் விளைவு…. எம்ஜிஆர் காலத்தில் கொள்கையளவில் நீர்த்துப் போன தமிழக அரசியல் களம், அவரது மறைவின் போது சக்களத்திச் சண்டைக்கான களமாக காறி உமிழும் நிலைக்கு தாழ்ந்தது. வி.என்.ஜானகிக்கும் திராவிட இயக்கத்திற்கும் என்ன தொடர்பு? ஜானகிக்கு மட்டுமா? திமுகவில் இருந்து பிரிந்து சென்ற சிலரைத் தவிர, எம்ஜிஆருடன் இருந்த பெரும்பான்மையினருக்கும் திராவிட இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தொடர்பு என்பது சிந்தனையும், கருத்துப் பிடிமானமும்தான். திரையுலகம் சார்ந்தும், வேறு பல தொடர்புகள் சார்ந்தும் எம்ஜிஆரைச் சூழ்ந்த கூட்டம், தமிழகத்தில் கொள்கை அரசியலின் சாயல் துளியும் இன்றித் துடைத்தெறியும் வேலையை துடிப்புடன் அரங்கேற்றியது. ஜேப்பியார், நகைச்சுவை (அவரைப் பார்த்தால் சிரிப்பும் வராது) நடிகர் ஐசரி வேலன் போன்றவர்கள் கல்வித் தந்தை ஆனது, எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவின் மோசமான சமூக விளைச்சலுக்கு ஓர் உதாரணம். எம்ஜிஆர் மறைவை அடுத்து நடந்த சண்டையில், ஜெயலலிதா வென்றார். எம்ஜிஆரேனும் திமுக என்ற மாபெரும் பாசறைக்குள் சுமார் 18 ஆண்டுகள் புழங்கிப் பயிற்சி பெற்றவர். ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆருக்கு நெருக்கமானவர் என்பதைத் தவிர, வேறு எந்த அரசியல் தகுதியும் இல்லை. ஆனாலும் அதிமுக அவர் வசமானதற்குக் காரணம், எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட “வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்” என்ற உளவியல்தான்.  ஜெயலலிதா எப்படிப்பட்டவர் என்பதை, சிறிதளவு சிந்திக்கும் திறனும், குறைந்த பட்ச நேர்மை உணர்வும் இருந்தாலே உணர்ந்து கொள்ள முடியும். ஆடம்பரத் திருமணத்தில் தொடங்கிய அவரது அதிரடி அரசியல், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் கைது, கலைஞர் கைது, ஒரே நேரத்தில் நான்கு தொகுதிகளில் வேட்பு மனுக்களைப் போட்டு தேர்தல் ஆணையத்தையே திணறச் செய்தது, வாஜ்பாயின் ஆட்சியைக் கவிழ்த்தது என  அவரது இறுதிக்காலம் வரை நீண்டது. எம்ஜிஆர் மறைவு ஜெயலலிதா என்ற சீரழிவு அரசியலுக்கு தமிழகத்தில் வித்திட்டது என்றால், ஜெயலிலதா மறைவோ, தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தீபா, விஷால் என அதனிலும் சீரழிவான காட்சிகளுக்கு வித்திட்டுள்ளது.

மற்றொரு புறம்…. ஜெயலிலாதா இருக்கும் போது, உதட்டிழிப்பைத் தவிர, ஒருவார்த்தை கூட உதிர்க்க இயலாத, உயிருள்ள பொம்மைகளைப் போல பொதுவெளியில் வலம் வந்து கொண்டிருந்த அதிமுக அமைச்சர்களும், பிரபலங்களும், தற்போது பேசிப்பேசியே மக்களைக் குழப்பி வருகின்றனர். ஜெயலலிதா மரணத்திற்குப் பின் அவரது கட்சியளவில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் முக்கியமானதாக பிரலாபிக்கப்படுகிறது.

ஆனால், சர்வாதிகார நிலவறைக்குள் நீண்டகாலமாக அடைபட்டுக் கிடந்து விட்டு, திடீரென சுதந்திர வெளிச்சத்தைப் பார்த்தவுடன் துள்ளிக்குதித்து ஆர்ப்பரிக்கும் அடிமைகளின் உற்சாகத்தைத் தவிர, அதில் ரசிப்பதற்கும், மதிப்பதற்குமான அம்சங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

அரசியலில் ஜெயலலிதா எனும் ” ஆளுமை”  விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பப் போவது யார் என்று வேறு பலரும் புலம்புகின்றனர்.

ஏன்… ஜெயலலிதாவுக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னரே அரசியல் களத்தில் இறங்கி பணியாற்றி வரும் மு.க.ஸ்டாலின் தலைவர் இல்லையா? மேயராக எழில் மிகு சென்னையை வடிவமைத்தது, உள்ளாட்சித் தலைவராகவும்,  துணை முதலமைச்சராகவும் நல்லாட்சிக்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டது என தன்னுடைய திறனை அவர் நிரூபிக்கவில்லையா?

அரசியலில், எத்தகைய சர்ச்சையான கேள்விகளுக்கும், தத்துவார்த்த தெளிவோடும்,  கூரிய பார்வையோடும் பதிலளிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஏன் இவர்களால் ஏற்க முடியவில்லை?

இத்தனை களேபரத்திலும் எளிய மக்களுக்கான போராட்டங்களை சளைக்காமல் முன்னெடுத்துவரும் இடதுசாரிக் கட்சிகளில் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், சி.மகேந்திரன், வீரபாண்டியன் என இன்றைய தலைமுறைத் தலைவர்களும்,  நல்லகண்ணு, சங்கரய்யா, தா.பாண்டியன் போன்ற மூத்த தலைவர்களும் இல்லையா?

கொள்கை  முரண்பாடுகள்  ஆயிரம் இருப்பினும், தமிழகத்தின் நலம்சார்ந்து பேசும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் சீமான், பாமக அன்புமணி போன்றோர் இல்லையா?

என்ன வெற்றிடத்தைக் கண்டுவிட்டீர்கள்?                              

வெறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட சர்வாதிகளின் மறைவு, அதிர்வுகளை மட்டுமின்றி, தோற்ற அளவில் ஒரு விதமான வெற்றிடத்தையும் ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால், அது ஆரோக்கியமான சிந்தனைகளும், ஆளுமைகளும் வளர்வதற்கு காலம் அளிக்கும் இடைவெளியே தவிர, வெற்றிடமல்ல.

தவிர, எளிய மக்களிடம் அதிகாரத்தைக் கொண்டு சேர்க்க நினைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரக் கனவை வேண்டுமானால் ரசிக்கலாம்… பாசிச சர்வாதிகாரத்தை ரசிக்கவும் முடியாது. ஏற்கவும் முடியாது.

அத்தகைய ஜனநாயக விபத்தின் வெற்றிடத்தை அவசியம் நிரப்பத்தான் வேண்டுமா என்ன?

 

 

மணல் குவாரிகளை மூடுவதற்கு எதிராக தடை விதிக்க மறுப்பு..

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் : விஷால் வேட்பு மனுவை ஏற்பதில் சிக்கல்..

Recent Posts