கொடி வீரன் : திரைவிமர்சனம்..

கொடி வீரன்


சசிகுமார் படம் என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும் இந்த எதிர்பார்ப்பு சுப்பிரமணியபுரத்தில் தொடங்கியது. தற்போது மிகுந்த துயரத்தை தாண்டி கொடி வீரன் படத்தை எப்படியோ இன்று ரிலிஸ் செய்துவிட்டார் சசிகுமார்.

சமீப காலமாக தோல்வியை சந்தித்து வந்த இவருக்கு நம்பிக்கை தரும் வகையில் மீண்டும் தன் நண்பர் முத்தையாவுடன் இணைந்து கொடுத்துள்ள படம் தான் கொடி வீரன். சசிகுமாருக்கு வெற்றியை கொடுத்ததா? இந்த கொடி வீரன் பார்ப்போம்.

கதைக் கரு

சசிகுமார் சிறு வயதிலேயே தன் தாயை இழக்கின்றார். அன்றிலிருந்து தன் தங்கையை அவர் தான் பார்த்துக்கொள்கின்றார். தன் தங்கைக்கு ஒன்று என்றால் ஊரே எதிர்த்து வந்தாலும் உண்டு, இல்லை என்று பார்த்துவிடுவார்.

அப்படியிருக்க அதே ஊரில் பசுபதி அவருடைய தங்கை கணவனுடன் சேர்ந்து கொண்டு பல நாச வேலைகளை செய்து வருகின்றார். இதை அந்த ஊர் வருவாய் துறை அதிகாரி விதார்த் தட்டி கேட்கின்றார்.

விதார்த்திற்கும் சசிகுமார் தங்கைக்கும் திருமணம் நடக்க, பிறகு என்ன தன் மச்சான் பிரச்சனை இனி என் பிரச்சனை என சசிகுமார் இவர்களை காப்பாற்ற செய்யும் வேலையே மீதிக்கதை.

படம் எப்படி

சசிகுமார் பிரம்மா, பலே வெள்ளையத்தேவா என பல ரூட்டில் சென்று நமக்கு இது தான் சரி என்று கிராமத்து வீரனாக களம் இறங்கிவிட்டார். தன் தங்கைக்காக எதையும் செய்யும் தைரியம், தன் மச்சானுக்காக எதிரிகளை வெட்டி சாய்க்கும் வீரம் என தனக்கே உரிய ஸ்டைலில் கலக்கியுள்ளார். ஆனால், படம் முழுவதும் இவரை 10 பேர் 10 பன்ச் பேசி பில்டப் செய்துக்கொண்டே இருக்கின்றார்கள், அது தான் ஏன் என்று தெரியவில்லை.

பசுபதி நீண்ட இடைவேளைக்கு பிறகு மிரட்டல் வில்லனாக கலக்கியுள்ளார். ஆனால், சமீபத்தில் வந்த கருப்பன் படத்தின் சாயல் மிகவும் அப்பட்டமாக தெரிகின்றது, ஏன் கதையிலேயே தெரிகின்றது. படத்தின் மிகப்பெரும் பலமே செண்டிமெண்ட் காட்சிகள் தான்.

பசுபதி தன் தங்கை பூர்ணா மீது உயிராக இருக்கின்றார், சசிகுமார் தன் தங்கை சனுஷா மீது உயிராக இருக்கின்றார். இவர்கள் இருவரின் பாசத்தில் வென்றது யார் என்ற ஒன்லைனை மிகவும் ஜனரஞ்சகமாக சொல்ல முயற்சித்துள்ளார் முத்தையா? ஆனால், படத்தில் எதற்கு இத்தனை வெட்டுக்குத்து, அதிலும் பாடல் வரிகளில் எல்லாம் ‘உன் தலையை வெட்டி வைப்பேன்’ என்று படம் முழுவதும் வன்முறை தலைவிரித்து ஆடுகின்றது.

படத்தில் பெண்களுக்கான காட்சிகள் மிகவும் அழுத்தமாக உள்ளது, சனுஷா ரேணிகுண்டாவிற்கு பிறகு ஒரு நல்ல கதாபாத்திரம், அதிலும் கிளைமேக்ஸில் பூர்ணாவிடம் சென்று சசிகுமாருக்காக பேசும் காட்சியில் கவர்கின்றார். பூர்ணாவிற்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அழுத்தமான கதாபாத்திரம், மிரட்டியுள்ளார்.

கதிரின் ஒளிப்பதிவில் கிராமத்து பகுதிகளை கண்முன் கொண்டு வந்துள்ளார். ரகுநந்தன் இசையும் நம்மை அப்படியே அந்த காட்சிகளுக்குள் இழுத்து செல்கின்றது, பின்னணியில் அசத்தியுள்ளார்.

ப்ளஸ்

படத்தின் இரண்டாம் பாதி விதார்த்திற்கு என்ன ஆகும், சசிகுமார் காப்பற்றுவாரா என்ற பரபரப்பு தொற்றிக்கொள்கின்றது.

செண்டிமெண்ட் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.

மைனஸ்

படம் முழுவதும் வரும் வன்முறை காட்சிகள், இன்னும் இதே கதைக்களத்தில் முத்தையா எத்தனை படம் தான் எடுப்பார் என கேட்க தோன்றுகின்றது.

மொத்தத்தில் கொடிவீரன் ரசிகர்களின் மனதை வெல்கிறான்.

 

 

பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..

குளச்சலில் மீனவர்கள் போராட்டம்..

Recent Posts