குஜராத், இமாச்சல் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு : கருத்து கணிப்பில் தகவல்..

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தல்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 182 தொகுதிகளில், முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளுக்கு இன்று (வியாழன்) வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது. 2ம்கட்ட தேர்தல் முடிந்ததை தொடர்ந்து இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.

இதேபோல் இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 9ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸூக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸிடம் இருந்த பாஜக ஆட்சியை கைபற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியா டூடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆளும் பாஜக 99 -113 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸூக்கு 68 முதல் 82 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறர் 1-4 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 47% வாக்குகளும், காங்கிரஸூக்கு 42 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேச தேர்தல் தொடர்பாக இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் மொத்தமுள்ள 68 இடங்களில் 47 – 55 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 13- 20 இடங்களில் வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சி வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் குஜராத்தில் பாஜக 108 இடங்களிலும், காங்கிரஸ் 74 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் பாஜக 41 இடங்களிலும், காங்கிரஸ் 25 இடங்களிலும் 2 இடங்களில் மற்றவர்களும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் தேர்தல் தொடர்பாக, என்டிடிவி நடத்திய கருத்து கணிப்பில் பாஜக 112 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.