முனிசேகர் துப்பாக்கியிலிருந்து எதிர்பாராதவிதமாகப் பாய்ந்த குண்டுக்கு பெரியபாண்டியன் உயிரிழந்தார் என பாலியின் எஸ்பி பார்கவா தகவல் தெரிவித்துள்ளார்.
முனிசேகர் துப்பாக்கியில் இருந்து எதிர்பாராதவிதமாக பாய்ந்து குண்டுக்கு பெரியபாண்டியன் பலியாகி உள்ளார். இந்த தகவலை பாலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் பார்கவா வெளியிட்ட அறிக்கையில் உறுதி அளித்துள்ளார்.
கடந்த செவ்வாய் இரவு, ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமை பிடிக்க சென்ற போது மதுரவயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி பலியாகி இருந்தார். இவர் மீது பாய்ந்த குண்டு எங்கிருந்து வந்தது? யாருடைய துப்பாக்கியில் இருந்து வெளியானது? போன்ற மர்மம் நீடித்து வந்தது. பெரியபாண்டியனிடம் இருந்து அவரது துப்பாக்கியை பறித்து நாதுராம் சுட்டு விட்டு தப்பியிருக்கலாம் எனவும் அல்லது தற்காப்பிற்காக முனிசேகர் சுட்ட போது அது பெரியபாண்டியன் மீது பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் கிளம்பியது.
இதன் மீதான விசாரணை புதன் மற்றும் வியாழக்கிழமை சம்பவ இடத்தில் நடைபெற்றது. இதை நேரில் பார்க்க சென்னையில் இருந்து அதன் இணை ஆணையர் சந்தோஷ்குமார் ஜெய்தாரன் அனுப்பப்பட்டிருந்தார். இவர்களுடன் சென்னையின் படையினரான இன்ஸ்பெக்டர் டி.எம்.முனிசேகர், தலைமை காவலர் சுதர்ஸன், காவர்களான அம்புரோஸ் மற்றும் குருமூர்த்தி ஆகியோரும் வரவழைக்கப்பட்டனர். ஜெய்பூர் அரசு தடயவியல் மற்றும் அறிவியல் ஆய்வகத்தின் ஆய்வாளர் குழுவும் அங்கு இருந்தது. இவர்கள் முன்னிலையில் சம்பவம் நடித்து காட்டப்பட்டது.
இதன்படி, கதவு திறக்கப்பட்டது சென்னை போலீஸாரை திருடர்கள் எனக் கருதி உள்ளே இருந்த தேஜாராம் மற்றும் அவரது குடும்பத்தினர் இரும்பு கம்பி மற்றும் தடிகளால் தாக்கத் துவங்கி உள்ளனர். அப்போது உள்ளே ஒளிந்திருந்த நாதுராம் தன்னை தேடி சென்னை போலீஸ் வந்திருப்பதை உணர்ந்து கொண்டான். அவனும் சேர்ந்து சென்னை போலீசாரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி விட்டான்.
இதை சமாளிக்க முடியாமல் நால்வரும் வெளியில் ஓடி வந்தனர். ஆனால், பெரியபாண்டியன் மட்டும் தேஜாராம் கும்பலிடம் சிக்கிக் கொண்டார். அவர்களிடம் இருந்து பெரியபாண்டியனை காப்பாற்ற வேண்டி முனிசேகர் தன் துப்பாக்கியை வெளியில் எடுத்துள்ளார். அப்போது, தவறுதலாக ஒரு குண்டு பெரியபாண்டியின் அள்ளையில் பட்டு வெளியேறி உள்ளது.
இதை உறுதிப்படுத்திய பாலியின் எஸ்பியான தீபக் பார்கவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், சென்னை போலீஸார் உள்ளே நுழைந்ததும் அவர்கள் மீது தாக்குதல் துவங்கி உள்ளதாகவும் இதில், இருந்து நான்கு போலீஸாரும் தப்பி வெளியே ஓடி விட பெரியபாண்டியன் மட்டும் சிக்கி விட்டதாகவும் கூறியுள்ளார். அவர் தாக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு முனிசேகர் தனது துப்பாக்கியை எடுத்த போது அந்த குண்டு தவறுதலாக பெரியபாண்டியன் மீது பாய்ந்து விட்டதாகவும் விசாரணையில் தெரியவந்திருப்பதாகவும் எஸ்பி தீபக் கூறியுள்ளார்.
இதன் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறிய தீபக், இருதுப்பாக்கிகள் உட்பட பலதும் தடயவியல் ஆய்வகத்தின் துப்பாக்கி ஆய்வாளர்கள் (Ballistics Experts) ஆய்விற்காக அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் நாதுராமின் நண்பரான தேஜாராம்(40), அவரது மனைவியான வித்யா தேவ்இ(35) மற்றும் மகள் சப்னா தேவி(20) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ‘இவர்கள் மூவரும் இன்று மாலை ஜெய்தாராமின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டன. இதில், தேஜாராம் மட்டும் விசாரணைக்காக போலீஸ் காவலுக்கு அனுபப்பட்டுள்ளார். மற்ற இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மொத்தம் ஆறு வழக்குகள் பதிவாகி உள்ளது.