ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு..


ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் என மொத்தம் 59 பேர் போட்டியிடுகிறார்கள். தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து வெளியூர்களில் இருந்து வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 50 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

59 பேர் தேர்தல் களத்தில் இருப்பதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு எந்திரம், ஒரு ஒப்புகை சீட்டு எந்திரம் ஆகியவை தேவைப்படுகிறது. எனவே அதற்கு ஏற்ற வகையில் தேவையான எந்திரங்கள் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒதுக்கப்பட்ட எந்திரங்கள் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு அங்கு தேர்தல் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களிடம் இன்று (புதன்கிழமை) ஒப்படைக்கப்படும். இன்று இரவே வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடி மையத்தில் பொருத்தப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டு தயார்படுத்தப்படும்.
இதனைத்தொடர்ந்து நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருப்பதால், அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

வாக்குப்பதிவு ‘வெப்’ கேமரா மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். ஏற்கனவே வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப்பில் இருக்கும் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று வாக்களிக்கலாம். வாக்களிக்க செல்லும்போது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையையோ அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய 12 ஆவணங்களில் ஒன்றையோ எடுத்து சென்று வாக்களிக்கலாம்.

உணவு இடைவெளியின்றி தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 5 மணிக்குள் வாக்குப்பதிவு மையத்துக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு எந்திர பெட்டிகள் முறையாக ‘சீல்’ வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான சென்னை ராணி மேரி கல்லூரிக்கு எடுத்து செல்லப்படும்.

அங்குள்ள அறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூட்டி சீல் வைத்து பாதுகாக்கப்படும். வாக்கு எண்ணும் நாளான வரும் 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சீல் உடைக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டு வாக்கு எண்ணும் இடத்துக்கு கொண்டு வரப்படும். காலை 8 மணி முதல் ஒவ்வொரு சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

20 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிகிறது. எனவே முன்னிலை விவரங்கள் உடனடியாக தெரிந்தாலும் மதியத்துக்குள் தேர்தல் முடிவு முழுவதும் தெரிந்துவிடும்.

இதற்கிடையே தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாள் என்பதால், நேற்று அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தொகுதிகளில் காலையில் இருந்து இடைவிடாமல் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

மாலையுடன் பிரசாரம் முடிந்ததும், வெளியூர்காரர்கள் யாரும் தங்கி இருக்கிறார்களா? என திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து கண்காணித்தனர்.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 25-ம் தேதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு : விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..

Recent Posts