சபரிமலையில் 500 கிலோவுக்கும் அதிகமான வெடி மருந்துகள் பறிமுதல் ..


சபரிமலை பகுதியில் 15 கேன்களில் நிரப்பப்பட்டு இருந்த 500 கிலோவுக்கும் அதிகமான வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், சபரிமலையில் தற்போது பக்தர்கள் கூட்டம் களைகட்டிவருகிறது. விரதம் இருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சபரிமலை, பாண்டித்தாவளம் பகுதியில் மண்ணுக்கு அடியில் கேன்களில் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பத்தனம்திட்டா காவல் கண்காணிப்பாளர் சபேஸ் பினாய்க்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்மாறு அவர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, சன்னிதான எஸ்.ஐக்கள் பிரதீஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்றனர். அப்போது பாண்டித்தாவளம் பகுதியில் 15 கேன்களில் தலா 35 கிலோ வீதம் வெடி மருந்துகள் இருப்பது தெரிய வந்தது.

வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து

இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்த வெடி மருந்துகள், சபரிமலையில் நடக்கும் வெடி வழிபாட்டுக்கானது எனத் தெரிய வந்தது. சபரிமலையில் வெடி வழிபாடு ஏலம் எடுத்தவர் தினசரி 15 கிலோ மட்டுமே வெடி மருந்தை வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் வெடி மருந்தை மொத்தமாக இப்பகுதியில் பதுக்கி வைத்து கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக காவல் துறை வட்டாரத்தில் கேட்ட போது,’’சபரிமலை செல்லும் வழியில் மலைப் பகுதியில் ஒரு கொட்டகை அமைத்து இந்த வெடி வழிபாடு நடத்தப்படும். பெயரையும், நட்சத்திரத்தையும் சொல்லி ஒரு வெடி வெடிப்பார்கள். இதற்கு கட்டணம் உண்டு. ஒரு பெயருக்கு, ஒரு வெடி என்ற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.

நடப்பாண்டில் திருவனந்தபுரத்தை சேர்ந்த பவனன் சுதீர் என்பவர் வெடி வழிபாட்டுக்கான ஏலத்தை எடுத்துள்ளார். இது வனப் பகுதி என்பதால் 15 கிலோவுக்கு அதிகமாக வெடி மருந்து வைத்து, வெடி வழிபாடு செய்ய அனுமதியில்லை. ஒவ்வொரு முறையும் மலைப் பகுதியில் இருந்து கீழே சென்று வெடி மருந்துகளை எடுத்து வர வேண்டியிருப்பதால், ஒப்பந்ததாரர் பாண்டித்தாவளம் பகுதியில் மறைவாக கூடுதல் வெடிபொருள்களைப் பதுக்கி வைத்துள்ளார்.

ஆனால் இது சட்டப்படி தவறு. வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருந்த இடத்தின் அருகிலேயே சரியாக 15 மீட்டரில் குப்பைகளை எரிக்கும் இடம் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? அதிலும் ஏற்கனவே சபரிமலைக்கு வரும் ஜயப்ப பக்தர்களுக்கு ரயில் நிலையக் குடிநீர் தொட்டிகளில் சில விஷமிகள் விஷம் கலக்கும் வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் பரவியது. அதனால் இந்த விவகாரத்தையும் கவனமுடன் கையாண்டோம். ஒப்பந்ததாரரையும் எச்சரித்துள்ளோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றது”என்றனர்.

சன்னிதானம் காவல் சிறப்பு அதிகாரி சஞ்சய்குமார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றார்..


 

புதிய ரூ.2,000 நோட்டை திரும்பப்பெறும் எண்ணம் இல்லை : அருண்ஜேட்லி

2-வது டி20 கிரிக்கெட்: 88 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா..

Recent Posts