2 ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி, அ.ராசா டெல்லியிலிருந்து இன்று (சனிக்கிழமை) சென்னை திரும்பினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளித்தனர். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் நேரில் சென்று வாழ்த்தினர்.
கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 11 பேரையும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று பாட்டியாலா கோர்ட் கடந்த 21-ம் தேதி விடுவித்தது. இதனால் திமுக தரப்பினர் உற்சாகம் அடைந்தனர்.
விடுதலையான கனிமொழி, ஆ.ராசாவுக்கு வாழ்த்துகள் குவிந்தது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், தமிழக எதிர்க்கட்சித்தலைவர்கள், டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். திமுகவுக்கு எதிராக புனையப்பட்ட அவதூறு துடைத்தெரியப்பட்டதாக மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.
இந்நிலையில் டெல்லியிலிருந்து இன்று காலை விமானம் மூலம் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் சென்னை திரும்பினர். சென்னை திரும்பும் அவர்களை வரவேற்கவும் அதை வெற்றி விழாவாக கொண்டாடவும் திமுக தீர்மானித்தது. இன்று பிற்பகல் சென்னை திரும்பிய கனிமொழி, ஆ.ராசாவை வரவேற்க ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் சென்னை விமான நிலையத்தில் கூடினர்.
தாரை, தப்பட்டை, மேளதாளம் முழங்க அவருக்கு வரவேற்பு அளித்தனர். சரியாக 12-20-மணிக்கு கனிமொழி, ஆ.ராசா வெளியே வந்தனர். அவர்களை மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு திமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பூச்செண்டு கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் தொண்டர்கள் வாழ்த்துடன் வழி நெடுக வரவேற்புடன் கோபாலபுரம் அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு கருணாநிதியிடம் கனிமொழியும், ஆ.ராசாவும் வாழ்த்து பெறுகின்றனர்.
கண்கலங்கிய கனிமொழி..
விமான நிலையத்தில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோரை மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இருவரது கைகளையும் கோர்த்து தன்னுடன் நிறுத்தி புகைப்படம் எடுக்கச்சொன்னார். அப்போது புகைப்படத்திற்கு நின்ற கனிமொழி கண்கலங்கினார். புகைப்படம் எடுத்து முடித்தப்பின் ஸ்டாலினை நோக்கி திரும்பிய கனிமொழி அவரை பாசத்துடன் ஆரத் தழுவி நன்றி தெரிவித்தார். அவர் முதுகில் ஆதரவாக ஸ்டாலின் தட்டினார்.