கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜே.பி நகரை சேர்ந்தவர் ஸ்ரீநாதன் (வயது 65). இவரது வங்கி கணக்கில் 29 லட்சத்து 84 ஆயிரத்து 796 ரூபாய் இருந்தது. 2013-ம் ஆண்டு மே மாதம் 15-ந்தேதி இவரது செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் அவர் வங்கி கணக்கில் இருந்து தலா ரூ. 5 லட்சம் வீதம் இரண்டு வங்கி கணக்குகளுக்கு ரூ.10 லட்சம் மாற்றப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. தான் பணம் எடுக்காமல் வேறு யாரோ 2 பேர் தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடி விட்டதாக வங்கி நிர்வாகத்திடம் கூறினார்.
ஆனால் வங்கி நிர்வாகத்தினர் இதை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை. பணத்தையும் திருப்பி வாங்கித்தரவில்லை. இதனால் தான் கணக்கு வைத்து உள்ள தனியார் வங்கி மீது பெங்களூரு நகர இரண்டாவது கூடுதல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த நீதிபதி வாடிக்கையாளர்களின் கவனத்துக்கு வராமல் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
எனவே இந்த பரிமாற்றத்துக்கு வங்கி நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், 10 லட்சம் ரூபாய்க்கு ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டி சேர்த்து வழங்க வேணடும் என்றும் உத்தரவிட்டார்.மேலும் சட்ட போராட்டம் நடத்திய வாடிக்கையாளருக்கு வழக்கு செலவுக்காக 10 ஆயிரம் ரூபாயை தர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவால் இனிமேல் தங்கள் கணக்கில் இருந்து வேறு யாராவது பணத்தை எடுத்து விட்டால் வங்கி நிர்வாகத்தை எதிர்த்து வழக்கு போடலாம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.