சென்னை வெள்ளத்தில் அன்புடன் உதவி செய்த மக்கள் 20 ரூபாய் டோக்கன்களுக்கு விலைபோயுள்ளது பிச்சை எடுப்பதற்கு கேவலம் என்று ஆர்.கே.நகர் தொகுதி மக்களை கடுமையாக சாடியிருக்கிறார் நடிகர் கமல் ஹாசன்.
‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற பெயரில் தமிழ் வார இதழான ஆனந்த விகடன் இதழில் நடிகர் கமல்ஹாசன் தொடர் ஒன்றை எழுதிவருகிறார்.
சினிமா, அரசியல், பொழுதுபோக்கு, சமூக பிரச்சனைகள், அவலங்கள் என இத்தொடரில் நிறைய பேசுகிறார் நடிகர் கமல் ஹாசன்.
இதுவரை 13 பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில், இன்று வெளியான 14வது பாக கட்டுரையில் ஆர்.கே.நகர் தொகுதிவாசிகளையும், அங்கு நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாக களம்கண்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரனையும் கட்டுரையில் கடுமையாக சாடியிருக்கிறார் கமல் ஹாசன்.
திருடனிடம் பிச்சை எடுக்கலாமா?
சென்னை மழை வெள்ளத்தில் ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் செயல்பாடுகளை மெச்சிய கமல் ஹாசன், இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன்களுக்கு தொகுதிவாசிகள் விலைபோயுள்ளதாகவும், அதுவும் திருடனிடம் பிச்சை எடுப்பதுபோன்ற ஒரு கேவலம் எங்கேயாவது உண்டா என்றும் கமல் கேள்வியெழுப்பியுள்ளார்.
டோக்கன்கள் தற்காலிக இன்பம் மட்டுமே அளிக்கும் என்றும், வாக்குகளே நீண்டநாள் நிலைத்த பலனைத்தரும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருடன் – திருடன் விளையாட்டை எப்போது முடித்து வைக்க போகிறீர்கள்?
தமிழக வாக்காளர்களை குறிப்பிட்டு கேள்வியெழுப்பியுள்ள கமல் ஹாசன், ஆளுங்கட்சியின் திருடன் – திருடன் விளையாட்டை எப்போது முடிவுக்குக் கொண்டு வரப்போகிறீர்கள் என்று கட்டுரையில் கேட்டுள்ளார்.
செருப்பாக இருக்கத் தயார்!
இனி மக்கள்தான் செயல்பட வேண்டும் என்று கூறும் கமல் ஹாசன், அதற்கு தான் ஊக்கியாக இருக்க முடியும் என்றும், மக்கள் செல்ல வேண்டிய பாதையை காட்டத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
மக்கள் செல்லும் பாதை கரடுமுரடாக இருப்பின் அவர்களுக்கு செருப்பாக இருக்கவும் தயார் என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களை எழுப்பிவிட வேண்டும்
எல்லா நேரங்களிலும் பணம் ஜெயிக்காது என்றும், ரூபாயை மட்டும் வைத்துக்கொண்டு வாழமுடியாது என்றும் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்மக்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிவிட வேண்டும் என்றும், ஏழைகளின் அறிவுமட்டத்தை உயர்த்த சக தமிழர்கள் பாடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.