கேப்டவுன் டெஸ்ட் : தென் ஆப்பிரிக்கா 286 ரன்களுக்கு ஆல்அவுட்


இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அறிமுகமானார். ரகானே நீக்கப்பட்டு ரோகித் சர்மா சேர்க்கப்பட்டார்.

தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் ஓவரிலேயே தென்ஆப்பிரிக்காவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. 3-வது பந்தில் டீன் எல்கர் விக்கெட் கீப்பர் சகாவிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார்.

புதுப்பந்து அதிக அளவில் ஸ்விங் ஆனது. இதை பயன்படுத்தி புவனேஸ்வர் குமார் அசத்தினார். 3-வது ஓவரின் கடைசி பந்தில் மார்கிராமை எல்பிடபிள்யூ மூலம் வெளியேற்றினார். அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திர வீரர் ஹசிம் அம்லாவை 3 ரன்னில் வெளியேற்றினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 12 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.

4-வது விக்கெட்டுக்கு டி வில்லியர்ஸ் உடன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தென்ஆப்பிரிக்காவை சரிவில் இருந்து மீட்டது. டு பிளசிஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புவனேஸ்வர் குமார் வீசிய 9-வது ஓவரில் டி வில்லியர்ஸ் நான்கு பவுண்டரிகள் விரட்டினார். 14.1 ஓவரில் தென்ஆப்பிரிக்கா 50 ரன்னைத் தொட்டது. நேரம் ஆகஆக தென்ஆப்பரிக்காவின் ரன்ரேட் நான்கை தொட்டது.

டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி 55 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை விக்கெட்டை இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 26 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 59 ரன்களுடனும், டு பிளிசிஸ் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும். டி வில்லியர்ஸ் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

 

பும்ரா பந்தில் போல்டாகிய டி வில்லியர்ஸ்

மறுமுனையில் விளையாடிய டு பிளிசிஸ் 98 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து தென்ஆப்பிரிக்காவின் ரன் உயர்வுக்கு காரணமாக இருந்ததார்கள். அதன்பின் வந்த டி காக் 40 பந்தில் 43 ரன்களும், பிலாண்டர் 35 பந்தில் 23 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

8-வது விக்கெட்டுக்கு மகாராஜ் உடன் ரபாடா ஜோடி சேர்ந்தார். முதல் நாள் தேனீர் இடைவேளை வரை தென்ஆப்பிரிக்கா 53 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்திருந்தது. மகாராஜ் 23 ரன்னடனும், ரபாடா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

தேன்ர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் மகாராஜ் 35 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். மறுமுனையில் விளையாடிய ரபாடா 26 ரன்னும், ஸ்டெயின் அவுட்டாகாமல் 16 ரன்னும் எடுக்க தென்ஆப்பிரிக்கா 73.1 ஓவரில் 286 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் நான்கு விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது.