போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் வாபஸ்..


8 நாட்களாக நீடித்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அரசுத்தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், போராட்டம் நடத்திய காலத்திற்கு சம்பளம் வழங்கப்பட மாட்டது, வழக்குப்பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை உண்டு என தெரிவிக்கப்பட்டது.

அரசின் இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு மட்டும்தான் வழக்கு தொடரப்பட்டது என நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து, போராட்ட காலத்திற்கு ஊதியம், வழக்குப்பதிவு உள்ளிட்ட விவகாரங்களில் பரிசீலனைக்கு பின்னர் முடிவெடுக்கப்படும் என அரசு வழக்கறிஞர் கூறினார்.

இழுவையில் இருக்கும் 0.13 காரணி ஊதிய உயர்வு குறித்து இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தரை நியமிக்க தயார் என நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நடுவராக நியமித்து ஐகோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

2.57 காரணி ஊதியம் தொடர்பாக மத்தியஸ்தர் முடிவெடுப்பார் என்றும், எந்த தேதியிலிருந்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை அவரே முடிவெடுப்பார் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் நீண்ட ஆலோசணை நடத்திய தொழிற்சங்கத்தினர் தற்போது செய்தியாளர்களை சந்தித்தனர். 2.57 காரணி ஊதிய உயர்வை மத்தியஸ்தரிடம் வலியுறுத்துவோம் என்று கூறிய சி.ஐ.டி.யு தலைவர் டி.சவுந்தரராஜன் ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

நாளை காலை அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திரும்புவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதனால், நாளை காலை முதல் பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து தொழிலாளர் பிரச்னையில் மத்தியஸ்தராக ஓய்வுப்பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம்

ஹெச்.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்..

Recent Posts