இந்திய தலைநகர் டெல்லியில் 69வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். நாடு முழுவதும் 69வது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியரசு விழாவில் நாட்டின் பெருமையை பறைசாற்றும் விதமாக பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முதல் முறையாக பைக் வீராங்கனைகளின் சாகசம், பிரம்மோஸ் ஏவுகணை அணிவகுப்பு, குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் அணிவகுப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்தாண்டு ‘ஆசியான்’ உச்சி மாநாட்டுக்காக டெல்லிக்கு வந்த 10 ஆசியான் நாடுகளின் தலைவர்கள், இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். இதனை முன்னிட்டு டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார், துணை ராணுவம், ராணுவம், கமாண்டோக்கள் என மொத்தம் 50 ஆயிரம் வீரர்கள் தலைநகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையை சுற்றி குவிக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் டெல்லி வான் எல்லையில் விமானங்கள் பறக்க 2 மணிநேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசியான் மாநாட்டுக்கு வந்த கிழக்காசிய நாடுகளின் 10 தலைவர்கள் அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பதால் இந்த குடியரசு தினவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த்தாக பார்க்கப்படுகிறது.