பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து தொடரும் போராட்டம் மதுரையில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி
தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மதுரையில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி உள்ளதால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. தமிழக அரசு பேருந்து கட்டணங்களை திடீரென்று உயர்த்தியது. இந்த அதிக கட்டண உயர்வால் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனைக் கண்டித்து கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன
இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தின. இதற்கு ஆதரவாக, பல்வேறு இடங்களில் பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். திருவாரூர், கோவை, அரியலூர், மதுரை, சென்னை என பல இடங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.
அரியலூரில் 2000 கல்லூரி மாணவர்களும், மதுரை அருகே மேலூரில் பல்வேறு தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் மேலூர் மற்றும் அழகர்கோவிலில் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.