பத்மாவத் திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை

இந்தியாவில் பல்வேறு தடைகளை தாண்டி பத்மாவத் திரைப்படம் வெளியாகி வசூலை குவித்துக் கொண்டு இருக்கும் நிலையில், முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக கூறி அந்த படத்திற்கு மலேசிய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி மறுத்துள்ளது.

தீபிகா படுகோன், சாகித் கபூர், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பத்மாவத்’. ராஜப்புத்திர ராணி. பத்மாவதியின் வரலாறு திரித்து சொல்லப்பட்டுள்ளதாகக் கூறி, அப்படத்திற்கு ராஜ்புத்திர கர்னி சேனா உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. எதிராக வழக்குகளும் தொடுக்கப்பட்டன. ஆனால், உச்ச நீதிமன்றம் படத்தை திரையிட அனுமதி வழங்கியது.

கடந்த 25-ந்தேதி ‘பத்மாவத்’ திரைப்படம் திரைக்கு வந்தது. ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை உண்டாக்கிய ‘பத்மாவத்’ திரைப்படம் ரிலீசான 3 நாட்களில் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இந்நிலையில் பத்மாவத் திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மலேசிய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் முகமத் சாம்பிரி அப்துல் அஜிஸ் கூறுகையில் ‘‘பத்மாவத் திரைப்படம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் இருப்பதால் அதற்கு அனுமதி வழங்க முடியாது. முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடு மலேசியா என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்’’ எனக்கூறினார்.

இதனிடையே, பத்மாவத் திரைப்பட விநியோகஸ்தர்கள் இந்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். அப்போது இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறி தெரிகிறது. எனினும் இதுதொடர்பாக மலேசிய அரசு சார்பில் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பாகிஸ்தானில் காட்சிகள் எதுவும் வெட்டப்படாமல் பத்மாவத் திரைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புகழ் பெற்ற வெனிஸ் திருவிழா ( வீடியோ)

நிமிர் திரை விமர்சனம்..

Recent Posts