காவிரி நீரில் தமிழகத்தின் பங்கு குறைப்பு மிகப்பெரிய அநீதி: ராமதாஸ்..


காவிரியில் தமிழகத்தின் பங்கு 14.74 டி.எம்.சி. குறைக்கப்பட்டது மிகப்பெரிய அநீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “காவிரியில் தமிழகத்தின் பங்கு 14.74 டி.எம்.சி. குறைக்கப்பட்டது மிகப்பெரிய அநீதி. இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. 1924-ஆம் ஆண்டில் தமிழகத்தின் பங்கு 575.68 டி.எம்.சியாக இருந்தது. இப்போது  404  டி.எம்.சியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு திருத்தப்பட வேண்டும்” என சுட்டிக் காட்டியுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், “காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு தண்ணீரைப் பெற்றுத் தரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கண்ணீரை மட்டுமே பெற்றுத் தந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று (வெள்ளிக்கிழமை) காலை ர்நாடகா, தமிழகம் இடையே நீண்ட காலமாக தொடரும் காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2007-ல் நடுவர் மன்றம் 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில் 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தீர்ப்பின் மூலம் தமிழகத்துக்கு இனி காவிரியில் இருந்து மொத்தம் கிடைக்கக் கூடிய நீர் 404.25 டிஎம்சி என்ற அளவில் இருக்கும். முன்னதாக இது 419 டிஎம்சி என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.