ஒன்றரை கோடி தொண்டர்களினால் கட்டிக்காக்கப்படும் மாபெரும் இயக்கம் அதிமுக என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இந்த ஆட்சியை எந்த கொம்பனாலும் தொடக்கூட முடியாது என்றும் கூறியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்ஜிஆர் சிலைக்கு அருகில், ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக கலந்துகொண்டனர்.முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், தொண்டர்கள் அனைவரும் ஜெ.வின் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
சிலை திறப்பு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் கட்சியை பிரிக்க வேண்டும் என்றும் சிலர் கனவு காண்பதாக குற்றம் சாட்டினார். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதிமுகவை எஃகு கோட்டையாக கட்டிக்காத்தவர் ஜெயலலிதா. ஒன்றரை கோடி விசுவாசமான தொண்டர்கள் நிறைந்த கட்டுப்பாடான இயக்கம் அதிமுக.
இருபெரும் தலைவர்கள் முதல்வர், எம்ஜிஆர், ஜெயலலிதா என இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய எக்கு கோட்டை அதிமுக. பல்வேறு சோதனைகளை படிக்கட்டுகளாக்கி கட்சி தொடங்கி எம்ஜிஆர் பல வெற்றிகளை குவித்ததார். கட்சி இரண்டாகப் பிரிந்த நேரத்தில் பல சோதனைகளைக் கடந்து கட்சியை ஜெயலலிதா இணைத்தார்.
அதிமுக எஃகு கோட்டை இந்தியாவிலேயே ஒரு கட்டுப்பாட்டோடு உள்ள இயக்கம் அதிமுக என்பதை ஜெயலலிதா நிரூபித்தார். நாட்டு மக்களின் நலனுக்காக 110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
கட்சி, ஆட்சியை கலைக்க முடியாது அதிமுகவை உடைக்கவோ, ஆட்சியை கலைக்கவோ யாராலும் முடியாது. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களின் நினைப்பெல்லாம் பகல் கனவாகவே முடிந்துவிடும் . நாங்கள் அனைவரும் ஒருமித்த எண்ணத்தோடு பயணித்து கொண்டிருக்கிறோம். எங்கள் ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.