காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது:
”நரேந்திர மோடி அரசு வழக்கமான தந்திர அரசியலை கையாள்கிறது. பிரதமர் மோடி அரசு தற்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. தினந்தோறும் இந்த அரசு மீது புதிய புதிய ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, துவாரகா தாஸ் என அடுத்தடுத்து வங்கி மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் மத்திய அரசு மீது மக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் இருந்து திசை திருப்பவே தற்போது கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துள்ளது.
பாஜகவின் பழிவாங்கும் அரசியல் தொடர்கிறது. மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை, எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்கும் பாஜகவின் நடவடிக்கையே இது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி பணப் பரிவர்த்தனை புகாரில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். லண்டனில் இருந்து சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.