‘2ஜி’ வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட கனிமொழி மற்றும் ராசாவுக்கு எதிராக அமலாக்கத்துறை, சி.பி.ஐ., தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த டில்லி சிபிஐ உயர்நீதிமன்றம், விடுதலை செய்யப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், கலைஞர், ‘டிவி’க்கு, ஸ்வான் டெலிகாம் நிறுவனம், 200 கோடி ரூபாய் தந்ததாக கூறியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த, சிறப்பு விசாரணை நீதிமன்றம், கடந்தாண்டு, டிச., 21ல், ராஜா, கனிமொழி உட்பட, 19 பேரை, வழக்கிலிருந்து விடுவித்தது. இந்நிலையில், ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில் மார்ச் 19ம் தேதி அமலாக்கத்துறை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. தொடர்ந்து நேற்று (மார்ச் 20) சி.பி.ஐ., மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த இரு மேல்முறையீட்டு மனுக்களும் டில்லி உயர்நீதிமன்றம் நீதிபதி எஸ்.பி.கர்க் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ராஜா, கனிமொழி உள்ளிட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை மே 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.