பாகிஸ்தானில் முதல் முறையாக ஒரு செய்தித் தொலைக்காட்சி திருநங்கை ஒருவரை செய்தி வாசிப்பாளராக பணியமர்த்தி உள்ளது. பாகிஸ்தானில் 10 ஆண்டுகளாக இயங்கி வரும் கோஹினூர் என்ற செய்தித் தொலைக்காட்சியின் ரி லாஞ்ச் விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவின் சிறப்பு நிகழ்வாக மார்வியா மாலிக் என்ற திருநங்கையை செய்தி வாசிப்பாளராக அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. பத்திரிகையாளருக்கான இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துள்ள மாலிக், ஏற்கனவே மாடலிங் துறையில் அறிமுகமாகி இருக்கிறார். லாகூரி்ல் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற பேஷன் ஷோவில் திருநங்கை மார்வியா மாலிக் அழகு நடை பயின்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். எனினும், செய்தித்துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் தனது ஆர்வம் என்று கூறியுள்ளார் மாலிக். தம்மைப் போன்ற திருநங்கையர் இழிவாக நடத்தப்படும் நிலையை மாற்ற வேண்டும் என்பதே தமது லட்சியம் என மாலிக் தெரிவித்துள்ளார். கல்வித் தகுதி இருந்தும் மூன்றாம் பாலினத்தவர் என்பதால் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவி்த்துள்ளார். தெருக்களில் நடனமாடுவதும், பிச்சையெடுப்பதுமாக திருநங்கையரின் வாழ்வு முடிவதில் தமக்கு விருப்பமில்லை என்றும் மாலிக் கூறியிருக்கிறார். அது சரி, பாகிஸ்தான் என்றால் நமக்குள் படிந்திருக்கும் ஒருவிதமான சித்திரத்துக்கு நேர்மாறான நிஜமாக அல்லவா இந்த நிகழ்வு இருக்கிறது! இந்தியாவை விடுங்கள், நமது தமிழகத்தில் எத்தனை செய்தித் தொலைக்காட்சிகள் திருநங்கையரை செய்தியாளர்களாக பார்க்கத் தயாராக இருக்கின்றன? இப்படிக்கு ரோஸ் என ஒருவரை நிகழ்ச்சி நடத்துபவராக விஜய் டிவி அறிமுகப் படுத்தியது. அவரும் இப்போது என்ன ஆனார் என்று தெரியவில்லை.