காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு திட்டமிட்டு துரோகம் செய்கிறது: அன்புமணி குற்றச்சாட்டு..


உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததன் மூலம் தமிழக மக்களுக்கு மத்திய அரசு திட்டமிட்டு துரோகம் செய்திருப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு திட்டமிட்டு துரோகம் செய்திருக்கிறது. மத்திய அரசின் இந்த துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். அதேபோல், மத்திய அரசின் துரோகத்துக்கு துணைபோன தமிழக அரசை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

காவிரி பிரச்சினையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்திற்கு பச்சைத் துரோகம் மட்டுமே இழைக்கப்பட்டு வருகிறது. மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிகளுக்கு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி மட்டுமே பிரதானமாகத் தெரிவதால் காவிரி பிரச்சினையில் தெரிந்தே தமிழகத்திற்கு துரோகம் செய்கின்றன. தமிழகத்தில் ஆட்சியில் உள்ள கட்சிகளும் தங்களுக்கு நாற்காலியே பிரதானம் என்று கருதுவதால், அவையும் தங்களின் லாபத்திற்காக காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்க்கின்றன.

1960 ஆம் ஆண்டுகளின் இறுதியிலிருந்தே இதே நிலைதான் தமிழகத்தில் நீடிக்கிறது. அதன் காரணமாகத்தான் எளிதாகத் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய காவிரி பிரச்சினை இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. காவிரி ஆற்று நீர்ப்பகிர்வு குறித்த ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்படாதது, கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 4 அணைகள் கட்டப்பட்டது, காவிரி பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு திரும்பப் பெறப்பட்டது போன்றவை தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களில் சில.

காவிரி நடுவர் அமைத்த பிறகு தமிழகத்திற்கான உரிமைகள் மீட்டெடுக்கப்படவில்லை. காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வெளிவந்த பின்னர் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. மாறாக கர்நாடகத்தில் வசித்த தமிழர்கள் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல் நடத்தி அதனால் சிந்தப்பட்ட ரத்தம்தான் வெள்ளமாக ஓடியது.

இடைக்காலத் தீர்ப்பு வெளியான பிறகு அதை செயல்படுத்துவதற்கான காவிரி ஆணையம் அமைக்க 7 ஆண்டுகளாகின. ஆனால், அந்த அமைப்புக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு வெளியானபோதும், 2013 ஆம் ஆண்டில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டபோதும் அதையொட்டி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைக் கருத்தில்கொண்டு தமிழகத்திற்கு துரோகமே பரிசாகக் கிடைத்தது. இதற்கெல்லாம் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அதேநிலை தான் இப்போதும் தொடருகிறது. கர்நாடகத் தேர்தலைக் கருத்தில்கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பதை எவ்வாறு மன்னிக்க முடியாதோ, அதேபோல் தங்களின் சுயநலனுக்காக மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டிக்க மறுக்கும் தமிழக அரசையும் மன்னிக்க முடியாதது ஆகும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் பதவி சுகத்தை அனுபவிப்பதை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்ட பினாமி அரசு காலில் போட்டு மிதித்து விட்டது. தமிழகத்தின் உரிமைகளை இனியும் பினாமி அரசு மீட்டெடுக்கும் என்று நம்பிக் கொண்டிருப்பதும் சூரியன் மேற்கே உதிக்கும் என்றும் நம்புவதும் முட்டாள்தனத்தின் உச்சம்தான்.

ஜல்லிக்கட்டுக்காக ஒட்டுமொத்த தமிழகமும் எவ்வாறு கிளர்ந்து எழுந்ததோ, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழ்ச் சமுதாயம் எவ்வாறு கொந்தளித்துக் கொண்டிருக்கிறதோ அதேபோன்ற பொதுமக்கள் எழுச்சியின் மூலமாகத்தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி மத்திய அரசை நாம் நிர்பந்திக்க முடியும்.

இந்த உத்தியின் ஒரு கட்டமாக கடந்த 10 ஆம் தேதி ஈரோட்டில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து உழவர் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் இப்பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால் அடுத்து மேற்கொள்ள வேண்டிய போராட்டங்கள் குறித்து மார்ச் 30 ஆம் தேதி சென்னையில் கூடி விவாதிப்பதென அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி அனைத்து விவசாய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை தியாகராயர் நகர் பர்கிட் சாலையில் உள்ள ஸ்ரீ மகாலில் நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தின் தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் போராடுவது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் : கட்சி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

காரைக்கால் கைலாசநாதர் கோவில் தேரோட்டம்..

Recent Posts