பயத்தால் உண்ணாவிரத போராட்டத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ். பங்கேற்கவில்லை : தினகரன்..

ஆட்சியை கலைத்து விடுவார்கள் என்கிற பயத்தால் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.
பெங்களூர் ஜெயிலில் இருந்து 10 நாள் பரோலில் தஞ்சை வந்திருந்த சசிகலா கணவர் நடராஜனின் இறுதிச்சடங்கில் பங்கேற்று விட்டு நேற்று பெங்களூர் சிறைக்கு திரும்பினார். அவருடன் டி.டி.வி. தினகரன் சென்றிருந்தார். அப்போது அவர் பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

விவசாயிகள் நலனுக்காக மாணவர்கள், விவசாய அமைப்புகள் மற்றும் வணிகர்கள் அறிவிக்கும் போராட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொள்வார்கள்.

காவிரி பிரச்சினை 7 கோடி தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினை. மக்கள் அனைவரும் கொதித்தெழுந்துள்ளனர். பெரிய போராட்டங்கள் வெடிக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதான் உண்மை நிலை.

இதனை மத்திய அரசு உணராமல் இன்னும் 3 மாத காலம் அவகாசம் கேட்பது என்பது மிகவும் மோசமான செயல்பாடு. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு துளியும் இல்லை என்பதால்தான், மக்கள் அழிந்து போகட்டும், ஒழிந்து போகட்டும் என்று முடிவெடுத்து இதுபோன்று செயல்படுகிறார்களா? என தெரியவில்லை.
எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்தால் ஆட்சியை கலைத்து விடுவார்களோ என்கிற பயம்தான் இருவருக்கும். நான் கேள்வி பட்டவரை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். 3 பேருக்கும் உண்ணாவிரதம் இருப்பதற்கு எங்கேயும் இடம் ஒதுக்கியதாக தெரியவில்லை.

ஜல்லிக்கட்டுக்கு போராடியது போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் மாணவர்கள் மெரினாவில் போராடுகிறார்கள். அவர்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு.

காவிரி பிரச்சினை மக்கள் பிரச்சினை. இதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடினால்தான் தீர்வு கிடைக்கும்.

ஆளுங்கட்சியினர் எல்லா இடத்திலும் சர்வாதிகார முறையை பயன்படுத்தி தன்னிச்சையாக கூட்டுறவு தேர்தலை நடத்துவதாக அறிவித்து முடிவை அறிவிக்கிறார்கள். இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்வதற்கு நாங்களெல்லாம் தயாராகி கொண்டிருக்கிறோம்.

ஒரு மாநிலத்தில் சலசலப்பு ஏற்படும் என்று இன்னொரு மாநிலம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதற்கு காலம் தாழ்த்துவோம் என்று ஒரு அரசாங்கம் சொல்வது எப்படி நியாயமாகும். மக்கள் அனைவரும் இதனை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அம்மா உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தால் அவர்களே கலந்து கொள்வார்கள். உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளும் இடத்தை தெரிவிக்காத இவர்கள் தான் அம்மா வழியில் செயல்படுவதாக கூறிக்கொள்கிறார்கள்.

உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாமல் பன்னீர் செல்வம் தலப்பாக்கட்டு பிரியாணியும், பழனிசாமி ஆம்பூர் பிரியாணியும் சாப்பிட்டு படுத்துக் கொள்ளப் போகிறார்களா? இவர்கள் செய்வது அனைத்தும் கண் துடைப்புக்காகதான்.

இவ்வாறு தினகரன் கூறினார்.