தமிழகத்தில் லஞ்சம் கொடுக்க முடியாததால் வாகன உற்பத்தி முதலீடுகள் ஆந்திராவுக்கு செல்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டிற்கு கடந்த ஓராண்டில் வந்திருக்க வேண்டிய ரூ.25,000 கோடி மதிப்புள்ள வாகன உற்பத்தித் துறை சார்ந்த முதலீடுகள் ஆந்திரத்துக்கு சென்றுள்ளன. இந்த முதலீட்டாளர்களைக் கவர ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு விரும்பிய நிறுவனங்களை தமிழக அரசு விரட்டியடிது என்பது தான் இதற்கு காரணமாகும்.
உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டாகார்ப் ரூ.1,600 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 18 லட்சம் ஊர்திகளைத் தயாரிக்கும் ஆலையை தமிழகம் அல்லது கர்நாடகத்தில் அமைக்கத் திட்டமிட்டது. இதுதொடர்பாக தமிழக அரசுடன் நடத்திய பேச்சுகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், புதிய ஆலையை ஆந்திராவில் அமைக்க முடிவு செய்த அந்த நிறுவனம், சித்தூர் மாவட்டம் ஸ்ரீ சிட்டிக்கு அருகிலுள்ள மதனபள்ளம் என்ற ஊரில் இடத்தைத் தேர்வு செய்து கடந்த வாரத்தில் அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தி முடித்திருக்கிறது.
அங்கு அந்த ஆலைக்கு தேவையான உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்க ரூ.1,600 கோடியில் பல்வேறு சிறு தொழிற்சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் நேரடியாக 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
உண்மையில் ஹீரோ மோட்டார் வாகனத் தயாரிப்பு ஆலை சென்னைக்கு அருகில் ஸ்ரீபெரும்புதூரிலோ அல்லது ஓசூரிலோ அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக இந்த ஆலை ஆந்திராவுக்கு சென்றதற்கு முதல் காரணம் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுப்பதில் காட்டப்படும் அலட்சியம் மற்றும் அதற்காக நடத்தப்படும் பேரங்கள்தான். இரண்டாவது காரணம் புதிய தொழிற்சாலைகளை தமது மாநிலத்திற்கு அழைத்து வருவதில் ஆந்திர அரசு காட்டும் ஆர்வமும், வழங்கும் சலுகைகளும் தான்.
ஹீரோ நிறுவன ஆலை தமிழகத்திலோ, தமிழகம் ஒத்துவராத நிலையில் கர்நாடகத்துக்கோ செல்லும் வாய்ப்பு இருந்த நிலையில், அந்த நிறுவன உரிமையாளர் பவன் முன்ஜால் வீட்டுக்குச் சென்று விருந்து சாப்பிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அப்போது நடத்திய 30 நிமிடப் பேச்சுகளில் அந்த ஆலையை தமது மாநிலத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். அதனால் தமிழகம் நல்ல முதலீட்டை இழந்தது.
ஹீரோ நிறுவனம் மட்டும்தான் என்றில்லாமல் ரூ.11,000 கோடி முதலீட்டிலான கியா கார் ஆலை, ரூ.1,800 கோடி முதலீட்டில் அப்பல்லோ டயர்ஸ், ரூ.350 கோடியில் அசோக் லேலண்ட் வாகன ஆலை, டி.வி.எஸ் நிறுவனத்தின் சுந்தரம் பிரேக்ஸ் நிறுவனம், பாரத் போர்ஜ் நிறுவனம், சில தென் கொரிய நிறுவனங்கள் என மொத்தம் ரூ.25,000 கோடி முதலீடுகள் கடந்த ஓராண்டில் ஆந்திராவில் செய்யப்பட்டுள்ளன.
இவை அனைத்துமே தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டியவை. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்களின் தொழிற்சாலைகள் ஏற்கெனவே தமிழகத்தில் அமைந்துள்ளன. அதனால் அவற்றின் விரிவாக்கமோ, கூடுதல் தொழிற்சாலையோ தமிழகத்தில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் கேட்கும் லஞ்சத்தைக் கொடுக்க முடியாமல் பல நிறுவனங்கள் தமிழகத்தைவிட்டு வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிடுகின்றன.
தமிழ்நாட்டில் ஒரு நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய முன்வந்தால் தங்களுக்கு ரூ.400 கோடி லஞ்சம் வழங்க வேண்டும் என்றும், அதற்கு இணையான அளவுக்கு சலுகைகள் வழங்குவதாகவும் தமிழக ஆட்சியாளர்கள் பேரம் பேசுகின்றனர். நேர்மையான பன்னாட்டு நிறுவனங்கள் இதற்கு தயாராக இல்லை என்பதால் தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன.
மாறாக, ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்ய ஒரு நிறுவனம் விருப்பம் தெரிவித்தால் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளை முதல்வர் சந்தித்துப் பேசுகிறார். முதல் சந்திப்பிலேயே ஆந்திரத்தில் முதலீடு செய்வதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்கின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மானிய விலையில் நிலம், மானியக் கட்டணத்தில் மின்சாரம், சரக்கு மற்றும் சேவை வரியில் மாநில அரசின் பங்கு ரத்து உள்ளிட்ட சலுகைகளை ஆந்திர அரசு வழங்குகிறது. இது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முதலீட்டு மதிப்பில் 25% முதல் 50% வரை என்பதால் அந்த நிறுவனங்கள் மகிழ்ச்சியாக ஆந்திரத்தில் தொழில் தொடங்க ஒப்புக்கொள்கின்றன.
சுருக்கமாகக் கூற வேண்டுமானால், ஒரு நிறுவனம் தமிழகத்தில் ரூ.1,000 கோடியில் தொழில் தொடங்க நினைத்தால் அதற்காக ரூ.1,300 கோடி முதல் ரூ.1,400 கோடி வரை செலவழிக்க வேண்டும். ஆனால், ஆந்திரத்தில் இதற்காக ரூ.500 கோடி முதல் ரூ.750 கோடி வரை செலவழித்தால் போதுமானது. பெரிய நிறுவனங்கள் தமிழகத்தைவிட்டு, ஆந்திரத்தில் தொழில் தொடங்க முக்கியக் காரணம் இதுதான்.
ஆந்திராவின் ராயலசீமா பகுதியை மோட்டார் வாகன உற்பத்தி மண்டலமாக மாற்ற தீர்மானித்துள்ள சந்திரபாபு நாயுடு, அதற்காக அதிரடியாக முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் மோட்டார் வாகன உற்பத்தித் துறையில் ரூ.25,000 கோடி முதலீட்டை ஈர்த்துள்ள ஆந்திரம் அடுத்தகட்டமாக சுஸுகி நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளில் மோட்டார் வாகனத்துறையில் ரூ.1,500 கோடி முதலீடுகளை மட்டுமே ஈர்த்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதியில் 53.41% தமிழகத்திலிருந்து செய்யப்பட்டு வந்தது. அதனால் ஆசியாவின் டெட்ராய்ட் என்ற பெருமை தமிழகத்திற்கு கிடைத்தது. ஆனால், அந்தப் பெருமையை தமிழகம் வேகமாக இழந்து கொண்டிருக்கிறது. கண்களுக்கு எட்டிய தொலைவு வரை தமிழகத்திற்கு வாகனத்துறை முதலீடுகள் வருவதற்கு வாய்ப்புகள் தென்படவில்லை.
தமிழகத்தின் இந்த அவலநிலைக்குக் காரணம் தலைவிரித்தாடும் ஊழல்தான். ஊழலில் திளைக்கும் பினாமி அரசு உடனடியாக அகற்றப்பட்டால் மட்டுமே தமிழகம் தொழில் துறையில் முன்னேறும். ஊழல் அரசு அகற்றப்பட்டு, தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசு அமையும் காலம் தொலைவில் இல்லை” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.