ஜம்மு காஷ்மீரில் எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேதனை பதிவொன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டம், ரசானா என்ற கிராமத்தில் பக்கர்வால் என்ற நாடோடி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஜனவரி 10-ம் தேதி காணாமல் போனார். இந்நிலையில் ஒரு வாரத்துக்குப் பிறகு அச்சிறுமி அதேபகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக சிறப்பு போலீஸ் அதிகாரிகள் இருவர், தலைமைக் காவலர் ஒருவர் உட்பட 8 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது. சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து அவரை மயக்க நிலையில் வைத்து கோயிலொன்றில் அடைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவிக்கிறது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்கவேண்டி காஷ்மீர் பள்ளத்தாக்கில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் இச்சம்பவத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இதனை நீங்கள் புரிந்துகொள்ள அவள் உங்களுடைய சொந்த மகளாகத் தான் இருக்க வேண்டுமா? அவள் என்னுடைய மகளாகவும் இருக்கலாம். ஆசிஃபாவைக் காப்பாற்ற தவறியதற்காக ஒரு ஆணாக, தந்தையாக, குடிமகனாக நான் கோபம் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு, குழந்தையே. இந்நாட்டை உனக்கு பாதுகாப்பானதாக நாங்கள் உருவாக்கவில்லை. உன்னைப்போன்ற எதிர்கால குழந்தைகளுக்காகவாவது நான் நீதிக்காக போராடுவேன். உனக்காக துயரப்படுகிறோம், உன்னை ஒருபோதும் மறக்க மாட்டோம்” என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.