தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது ..


தமிழக அரசுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தம் விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

அதிக டிஜிட்டல் கட்டணத்தை எதிர்த்து, கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் புதுப்படங்களை ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். மேலும், மார்ச் 16 ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டன.

முதலில் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டம், பின்னர் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிரான போராட்டமாக மாறியது. இதனால், மார்ச் 23 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. சினிமா நிகழ்ச்சிகள் கூட நடைபெறவில்லை.

டிக்கெட் கட்டணத்தைக் கணினிமயமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்க மறுத்ததால், வேலை நிறுத்தம் நீண்டு கொண்டே சென்றது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், அமைச்சர்களைச் சந்தித்தும் சுமுகத்தீர்வு ஏற்படவில்லை. இதனால், தமிழ் சினிமாவுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டது.

தமிழக அரசால் தான் இதை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று சினிமாத்துறையினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கிய பேச்சுவார்த்தையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு உரிமையாளர்கள் சங்கம், டிஜிட்டல் சேவை ஒளிபரப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டன.

காலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மதியம் தொடங்கிய பேச்சுவார்த்தை ஒருவழியாக சுமார் 9 மணிக்கு சுமூகமாக முடிவுக்கு வந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “சினிமாத்துறை முழுக்க வெளிப்படைத்தன்மைக்கு வருகிறது. எனவே, இனிமேல் எல்லா திரையரங்குகளிலும் டிக்கெட் விற்பனை கணினி மூலமாகவே நடைபெறும். மேலும், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது எக்ஸ்ட்ராவாக வசூலிக்கப்படும் கட்டணம் இனிமேல் வசூலிக்கப்பட மாட்டாது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்ய தயாரிப்பாளர் சங்கமே முடிவெடுத்துள்ளது.

திரையரங்குகளுக்கு வரும் மக்களுக்கு எளிதாக இருக்கும் வகையில், படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படும்” என்றவர், வேலை நிறுத்தம் குறித்து நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனால், வருகிற வெள்ளிக்கிழமை முதல் படங்கள் ரிலீஸாக வாய்ப்புண்டு என்கிறார்கள் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள்


 

“எறும்பின் கால்கள் ” : எஸ்.ராமகிருஷ்ணன்

நிர்மலா தேவி சிறையில் அடைப்பு: ஏப்.28 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

Recent Posts