கியூபாவில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ட்ரோ குடும்பத்தினர் சேராத ஒருவர் புதிய அதிபராக பதவியேற்கிறார்
கியூபாவில் கடந்த 59 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ட்ரோ குடும்பத்தினர் சேராத ஒருவர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
கியூபா புரட்சிக்கு பின்னர் தலைமை தாங்கிய பிடல் காஸ்ட்ரோ 1959-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்தார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து பிடல் காஸ்ட்ரோவின் தம்பி ரவுல் காஸ்ட்ரோ அதிபராக இருந்து வந்தார். கடந்த மாதம் கியூபாவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற 605 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர்.
இதற்காக கியூபா நாடாளுமன்றத்தில் 2 நாட்கள் சிறப்பு கூட்டம் முடிந்து தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காஸ்ட்ரோ குடும்பத்தை சேராத ஒருவர் கியூபாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இருப்பினும் கியூப கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டின் தேசிய குழுவிற்கு ரவுல் காஸ்ட்ரோவே தலைவராக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.