நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையில், உற்பத்தி குறைக்க மக்கள்தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், உற்பத்தி வரியை குறைக்க நிதி அமைச்சகத்துக்கு விருப்பமில்லை என்ற செய்திகள் வந்துள்ளன.
இதனால், பெட்ரோல், டீசல் விலை இனி உயருமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை. மாறாக, மாநிலஅரசுகள் வேண்டுமென்றால், மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், வாட் வரியையும், விற்பனையை வரியையும் குறைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றன.
கடந்த 55 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூ.74.50 காசுகளாக உயர்ந்துள்ளது, டீசல் விலை எப்போதும் இல்லாததாக ரூ.65.75 காசுகளாக அதிகரித்துவிட்டது. இதனால், உற்பத்தி வரியை மத்திய அரசு குறைக்கும்பட்சத்தில் ஓரளவு பெட்ரோல்,டீசல் விலை குறையக்கூடும்.
இது குறித்து நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:
இப்போதுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் உற்பத்தி வரியை குறைப்பதற்கு வாய்ப்பே இல்லை. அவ்வாறு குறைக்கும் பட்சத்தில் அது அரசுக்கு பட்ஜெட்டின் வருவாய் பற்றாக்குறையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்பது அரசியல் சார்ந்த நோக்கத்துடன் கட்சிகளின் கோரிக்கையாகும். அப்படி இருக்கும் அந்த கோரிக்கையை ஏற்று வரியைக் குறைத்தால், பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள நிதிப்பற்றாக்குறையை எட்டமுடியாது. அது கட்டுக்கடங்காமல் சென்றுவிடும்.
நடப்பு நிதியாண்டுக்கு நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாகக் குறைத்துள்ளது. இந்த இலக்கை அடைய வேண்டியது அவசியமாகும். உற்பத்தி வரியில் ஒரு ஒரு ரூபாய் குறைத்தாலும், அரசுக்கு ரூ.13 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு நேரிடும். அதுமட்டுமல்லாமல், எங்களிடம் மத்திய பெட்ரோலிய அமைச்சகமும் உற்பத்தி வரியை குறைக்கக்கோரி எந்தவிதமான கோரிக்கையும் வைக்கவில்லை.
தேவைப்பட்டால், மாநில அரசுகள் மக்களின் சிரமத்தைக் குறைக்க விற்பனை வரி, வாட்வரியைக் குறைக்கலாம். ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய் உயர்வு என்பது பணவீக்கத்தில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், வரியைக் குறைத்தால், நிதிப்பற்றாக்குறையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்க முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், மீண்டும் விலையைக் குறைக்கக்கோரி எண்ணெய் நிறுவனங்களையோ அல்லது பெட்ரோலிய அமைச்சகத்தையோ கேட்பது என்பது சரியல்ல. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை பெட்ரோல்,டீசல் மீதான உற்பத்தி வரியை 9 முறை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதற்கிடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் 2 ரூபாய் குறைக்கப்பட்டது. தெற்காசியாவிலேயே பெட்ரோ, டீசலுக்கு அதிகமான உற்பத்தி வரிவிதிக்கப்படுவதும் இந்தியாவில்தான் என்பது நினைவுகூறத்தக்கது
கடந்த 15 மாதங்களில் பெட்ரோல் விலையில் ரூ.11.77 காசுகளும், டீசலில் 13.47 காசுகளும் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.2.42 லட்சம் கோடி வருவாய் உயர்ந்துள்ளது.
இது கடந்த 2016-17ம் ஆண்டு ரூ.99 ஆயிரம் கோடியாக மட்டுமே இருந்தது.
இப்போது நாம் வாங்கும் பெட்ரோல் மீது உற்பத்தி வரியாக லிட்டருக்கு ரூ.19.48 காசுகளும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 காசுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. இதுபோக விற்பனை வரி, வாட்வரி ஆகியவை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. டெல்லியைப் பொறுத்தவரை பெட்ரோல் மீது வாட் வரி ரூ.15.84 காசுகளும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.9.68 காசுகளும்விதிக்கப்படுகிறது.
உற்பத்தி வரியையும் விற்பனை வரியையும் முற்றிலுமாக நீக்கும் போதோ அல்லது ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல் டீசலைக் கொண்டுவந்தாலோ பெட்ரோல் விலை 50 ரூபாயைத் தாண்டாது, டீசல் லிட்டர் ரூ40க்குள்ளாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.