ஓர் ஆண், திருமண வயதான 21ஐ அடையாவிட்டாலும், 18 வயதைக் கடந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்கு முழு உரிமை உள்ளது’ என்று தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
கேரளாவைச் சேர்ந்த நந்தகுமார் என்ற இளைஞர், துஷாரா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தை எதிர்த்த துஷாராவின் தந்தை, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், துஷாராவுக்கு 18 வயது நிரம்பிவிட்டது. ஆனால், நந்தகுமாருக்கு திருமண வயதான 21 பூர்த்தியாகவில்லை. அவருக்கு 20 வயதுதான் ஆகிறது. எனவே, இந்தத் திருமணம் செல்லாது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ‘இந்தத் திருமணம் செல்லாது. துஷாரா அவரது தந்தையுடன் செல்ல வேண்டும்’ என உத்தரவிட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் நந்தகுமார். வழக்கை விசாரித்த நீதியரசர்கள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, ’18 வயதைக் கடந்த பெண், தனக்குப் பிடித்தவருடன் வாழ்க்கை நடத்துவதற்கு முழுச் சுதந்திரம் உள்ளது. ஆணுக்கு 21 வயது ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழ்வதற்கு உரிமை உள்ளது. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாத்துக் கொள்ளும் சட்டப் பிரிவின் படி தங்களுக்குப் பாதுகாப்பான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை பெண்களுக்கு உள்ளது.
எனவே, வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழலாம். இவர்கள், திருமணத்தின்போது நந்தகுமாருக்கு 20 வயது என்ற காரணத்தினால் மட்டும் இந்தத் திருமணம் செல்லாது என்று கூறுவதை ஏற்க முடியாது. நந்தகுமாரும், துஷ்ராவும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, இந்து மதத் திருமணச் சட்டம் 1955-ன் படி இவர்களது திருமணம் செல்லும். ‘யாருடன் சேர்ந்து வாழ வேண்டும்’ எனத் தீர்மானிப்பதற்கு துஷாராவுக்கு முழு சுதந்திரம் உள்ளது. எனவே, கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்கிறோம். 18 வயதைக் கடந்த பெண், 21 வயதைக் கடக்காத ஆணுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்துவாழ்வதற்கு உரிமை உண்டு’ என்று தெரிவித்துள்ளனர்.