தேனி மாவட்டம் குரங்கிணி மலையில் மலையேற்றம் செல்ல சென்ற 34 பேர் தீயில் கருகி இறந்த சோகக்கதை நாம் அனைவரும் அறிந்ததே. குரங்கிணி விபத்துக்கு பிறகு தமிழக அரசின் வனத்துறையும் சுற்றுலா துறையும் விழித்து கொண்டு மீண்டும் ஒரு விபத்து இது போன்று ஏற்படாமல் தவிர்க்க வழிவகை செய்திருக்க வேண்டும். ஆனால் எள்ளளவும் தமிழக வனத்துறையோ சுற்றுலா துறையோ எந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
அன்மையில் மூணாறு சுற்றுலா சென்றிருந்தேன.. அங்கிருந்து தமிழக வனப்பகுதியான “டாப் ஸ்டேசன் வியூ“ (Top station view) பகுதிக்குச் சென்றிருந்தேன். இந்தபகுதியிலிருந்து குரங்கிணி காட்டுத் தீ விபத்து ஏற்பட்ட பகுதியைக் காணலாம். குரங்கிணி மலையேறி தீவிபத்தில் இறந்தவர்கள் . குரங்கிணி மலை வழியாக இந்த “டாப் ஸ்டேசன் வியூ“ யை அடையத் திட்டமிட்டிருந்திருக்கிறார்கள்.
“டாப் ஸ்டேசன் வியூ“ பகுதி மிக உயரமான மலைகளையும் அழுகிய வனப்பகுதிகளையும் காண இயலும் பகுதி . மூணாறு சுற்றுலா வருபவர்கள் இங்கு சுற்றுலா வருகிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து பார்வையிடுகின்றனர்.
ஆனால் தமிழக வனத்துறையும்,சுற்றுலா துறையும் எந்த விதமான பாதுகாப்பும் இன்றி சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கிறது. இந்த லட்சனத்தில் பார்வையிடக் கட்டணம் வேறு.
கட்டணம் செலுத்தி அப்பகுதியைக் காணப் படியிறங்கினால் படிகள் நேர்த்தியாக இல்லை பக்கவாட்டில் பாதுகாப்புக் கம்பிகள் இல்லாமல் வெறும் கயிறு மட்டுமே கட்டியிருக்கிறார்கள். படிகள் மேடு பள்ளமாகக் காட்சியளிக்கின்றன. இந்த பகுதியில் நாம் சுமார் 1 கிலோ மீட்டர் நடந்து சென்றால்தான் அப்பகுதியை முழுமையாகப் பார்வையிட முடியும். தட்டு தடுமாறி சென்று கயிரைப் பிடித்தால் கீழே விழுந்தால் 1000 அடி பள்ளத்திற்குள் விழ வேண்டியதுதான். அபாயகரமாகத் தோன்றுகிறது.
குரங்கிணி விபத்து போல் மீண்டும் விபத்து நடப்பதாக்காண வாய்ப்பே இருக்கிறது.இந்த மாதிரி நிகழ்வு ஏற்பட்டு பிறகு நிவாரணம்,இரங்கல் தெரிவித்து அந்த நிகழ்வுக்கான காரணங்களை ஊடகங்கள் முதல் சமூக ஊடகங்கள் வரை விவாதிப்போம். அதோடு அடுத்த பிரேக் நியூஸ் வந்தவுடன் அதை விவாதிக்க தொடங்கி விடுவோம் .
தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு சுற்றுலாப் பயணிகளுக்குப்“ பாதுகாப்பை ஏற்படுத்தி தர வேண்டும். தற்போது கோடை விடுமுறை என்பதால் மலைப்பிரதேச சுற்றுலாத் தளங்களுக்கு அதிக மக்கள் செல்கின்றனர் என்பதைக் கவனித்தில் கொண்டு செயல்பட்டால் மீண்டும் ஒரு குரங்கிணி விபத்தை தடுக்கலாம்
அரசு கவனிக்குமா…