தாகூர் நோபல் பரிசை ஏற்க மறுத்து திருப்பி கொடுத்துவிட்டார் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் குமார் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக நடந்துவந்த இடது முன்னணி ஆட்சியை கடந்த சட்டப்பேரவையில் வீழ்த்தி, பா.ஜ.க கூட்டணியின் சார்பில் கடந்த மார்ச் 9 முதல் முதலமைச்சராக இருந்துவருபவர், பிப்லாப் குமார் தேப். வடமாநிலங்களின் பல பா.ஜ.க பிரமுகர்களைப் போலவே, இவரும் சர்ச்சைக்குரியவகையில் ஏதாவது பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். பிப்லாப் குமார் தேப்பின் கருத்து பாஜகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து வருகிறது.
தொடர்ந்து இதுபோன்ற கருத்துக்களை முன்வைத்து வரும் திரிபுரா முதல்வர், தற்போது தாகூர் பற்றி பேசியுள்ள ஒரு கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவீந்திர நாத் தாகூரின் பிறந்த தினத்தன்று உதய்பூரில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்டு பேசிய பிப்லாப் தேப், “ரவீந்திர நாத் தாகூர், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை திருப்பி கொடுத்து விட்டதாக தெரிவித்தார். பிப்லாப் தேப் குமார் கூறும் போது, “ 1913 ஆம் ஆண்டு நோபல் பரிசு தாகூருக்கு வழங்கப்பட்டது. ஆனால், ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை கண்டித்து 1919 ஆம் ஆண்டு தாகூர் தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை திருப்பி கொடுத்து விட்டார்” என்று தெரிவித்தார்.
பிப்லாப் தேப் குமாரின் இந்த கருத்தை மறுத்து டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள், கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிப்லாப் குமார் பேசிய வீடியோ தொகுப்பை பகிர்ந்து அவரை நையாண்டி செய்தும் வீடியோக்கள் வைரலாக பரவி வருகின்றன. ரவீந்திரநாத் தாகூர், தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை திருப்பி கொடுக்கவில்லை என்று நெட்டிசன்கள் பிப்லாப்பை விமர்சித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பிப்லாப் குமார் பேசிய இரண்டு கருத்துக்கள் கடும் கேலிக்குள்ளாகின. அதாவது, ” செயற்கைக்கோள், கணினி இணையம் ஆகியவை இன்று நேற்று வந்தது அல்ல; இவை மகாபாரத காலத்திலேயே இருந்துள்ளன” என பேசி சர்ச்சையில் சிக்கினார். அதேபோல்,
”கட்டுமானப் பொறியாளர்கள்தான் (சிவில் என்ஜினியர்ஸ்) ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற தேர்வுகளை எழுதுவதற்குத் தகுதியானவர்கள்; இயந்திரவியல் பொறியாளர்கள் அதற்குத் தகுதி இல்லாதவர்கள்” என்றும் பிப்லாப் குமார் கூற, அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து, தான் அவ்வாறு கூறவில்லை என ஒரு நாள் கழித்து மறுப்பு வெளியிட்டார்.
மேற்கு வங்காளச்சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரும், இந்திய தேசிய கீதத்தை இயற்றியவருமான ரவீந்திர நாத் தாகூர், 1913 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நோபல் பரிசை ஏற்றுக்கொண்டார். இருந்த போதிலும், 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்டித்து இங்கிலாந்து அரச குடும்பத்தினரால் வழங்கப்படும் மதிப்புமிக்க நைட்ஹூட்(Knighthood ) கவுரவத்தை ஏற்க மறுத்தார் என்பதே உண்மை.