இரவுக்கு ஆயிரம் கண்கள் : திரை விமர்சனம்..
போட்டிக்கு நடுவிலும் குற்றங்களை மையப்படுத்தி வெளியாகும் சில படங்கள் ஈர்ப்பை பெறுகின்றன. சமூக வலைதள குற்றங்கள், இணையதள மோசடிகள் என எத்தனையோ நடப்பதை அணுதினமும் நாம் காண்கிறோம்.
அந்த வகையில் பல இடங்களில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து வந்துள்ளது இரவுக்கு ஆயிரம் கண்கள். இந்த கண்களில் இருக்கும் கதை என்ன என பார்போம்…
கதைக்கரு
படத்தின் ஹீரோ அருள்நிதி ஒரு கால் டாக்சி டிரைவர். அன்றாடம் அவரின் பயணத்தில் பலரை சந்திப்பார். வழக்கம் போல ஒருநாள் சவாரியில் அவர் எதிர்பாராமல் ஹீரோயினை சந்திக்கிறார்.
பார்த்ததும் இவருக்குள் காதல் பற்றுகிறது. இவர்களுக்கிடையே தொடரும் நட்பு மெல்ல மெல்ல காதலாக மாறுகிறது. ஆனால் ஹீரோயினை ஒருவன் வல்லுறவு செய்ய முயற்சிக்கிறான்.
சாலையில் ஆதரவில்லாமல் மாட்டிகொண்ட ஹீரோயின் மஹிமாவுக்கு வழியில் வந்த நடிகர் அஜ்மல் உதவுகிறார். ஒருநாள் போலிஸ் அருள்நிதியை வலை வீசி தேடுகிறது.
அவரின் மீது கொலைக்குற்றம் சுமத்தப்படுகிறது. இன்னொரு நடிகையான சாயாசிங்கிற்கு திடீரென ஒரு பிரச்சனை. வீடியோ மூலம் மர்ம நபர் ஒருவன் பணம் கேட்டு மிரட்ட கதை சூடுபிடிக்கிறது.
மேலும் நடிகர் ஆனந்த் பாபு, ஜான் விஜய் ஆகியோருக்கும் ஒவ்வொரு ரூபத்தில் ஒரு மர்மமான முறையில் பிரச்சனை வருகிறது. மாட்டிக்கொண்ட இவர்களும் யார் அவன் என தேடி அலைகிறார்கள்.
இதற்கிடையில் அஜ்மலின் தோழிகளில் ஒருவரான சுஜா வருணி திடீரென மர்மமாக கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறார். இந்த கொலையின் பின்னணி என்ன?
அனைவரின் பின்னால் நடக்கும் விசயங்களுக்கு காரணம் யார்? அருள்நிதி கொலைகுற்றத்திலிருந்து தப்பித்தாரா என்பதே கதை.
படம் பற்றி ஒரு பார்வை
நடிகர் அருள்நிதி அதிகமான படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். நீண்ட நாளுக்கு பிறகு அவரின் நடிப்பில் இரவுக்கு ஆயிரம் கண்கள் வெளியாகியுள்ளது. டிமாண்டி காலனி படத்திற்கு பிறகு இப்படம் அவருக்கு பேர் சொல்லும் படியாக இருக்கும்.
கால் டாக்சி டிரைவராக தனக்கான வேடத்தில் தனித்துவமாக பொருந்துகிறார். முதலில் தொடங்கி முடிவு வரை இவரின் பங்கும் இருக்கிறது. அருள்நிதி படங்களில் காதல் நன்றாக இருக்கும். ஆனால் இப்படத்தில் முழுக்க முழுக்க சீரியஸான நகர்வு தான். நோ காதல் நோ பாடல் தான்.
ஹீரோயின் மஹிமா நம்பியார்க்கு இப்படத்தில் பெரிதளவில் ரோல் இல்லை என்றாலும் எதிர்பார்க்காத ஒரு விசயம் இவரின் பின்னால் இருக்கிறது. சாட்டை, குற்றம் 23 என முக்கிய படங்களை தொடர்ந்து அவருக்கு எதிபார்ப்பை கொடுத்துள்ளது. ஆனால் ஆடியன்ஸை கவர்ந்தா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான்.
சாயாசிங் ஒரு பிரச்சனையால் அமைதியில்லாமல் தவிக்க ஒரு கட்டத்தில் இவரும் அந்த மர்ம நபரின் பின்னணியில் சிக்குகிறார். இவருக்கு கொடுக்கப்பட்ட இடம் சிறிது தான். ஆனால் அதன் தாக்கம் பெரிது.
நடிகர் ஜான் விஜய் படங்களில் அண்மையில் காமெடி கலந்த ரோல்களில் நடித்து வருகிறார். அது அவருக்கு நல்ல வரவேற்பையும் கொடுத்தது. ஆனால் இந்த படத்தில் அதை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான்.
ஆனந்த்ராஜ் சமீபகாலமாக படங்களில் இவரை காணமுடிகிறது. ஒரு பயங்கர வில்லனாக நடித்தவர் இந்த ரேஞ்சுக்கு வந்துவிட்டாரே என சில இடங்களில் இவரை பார்த்தால் ஃபிளாஷ் வந்துபோகலாம்.
காமெடியன் என படங்களில் தனியான ஆள் இல்லை. ஆனால் ஆனந்த் ராஜே சில இடங்களில் காமெடி செய்கிறார். சில இடங்களில் ஒர்க்கவுட் ஆகிறது. டபுள் மீனிங் டையலாக்கை இவரும் லேசாக தெளிக்கிறார்.
இதற்கிடையில் எழுத்தாளராக லட்சுமி ராமகிருஷ்ணன். அவரின் கணவர் சாலையில் இறந்தார் என்கிறார். ஆனால் அவரின் பைக் என்ன ஆனது என சொல்லவே இல்லை.
படத்தில் திகில் படங்களுக்கான இசை தான் கொஞ்சம் கதை மீது ஆர்வத்தை தூண்டுகிறது. படம் முழுக்க இயக்குனர் சொல்ல வந்த விசயத்தை மட்டுமே கவனம் செலுத்துகிறார்.
ஆனால் பொழுதுபோக்காக அமைந்தததா என்றால் கேள்விக்குறியே..
ப்ளஸ்
இப்படியும் நடந்திருந்தால் என கதையில் ட்விஸ்ட் காட்டியது கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்.
அருள்நிதி, மஹிமா, ஆனந்த்ராஜ், சாயாசிங், ஜான் விஜய் என அனைவரின் நடிப்பும் ஓகே..
சாம் சி.எஸ் பின்னணி இசைதான் கொஞ்சம் தாக்கம் கொடுக்கிறது.
மைனஸ்
கதைக்குள் கதை என செல்வது கொஞ்சம் ஆர்வத்தை குறைக்கிறது.
அடுத்தடுத்து வரும் ஃபிளாஷ் பேக் காட்சிகளால் ஃபிரியாக படம் பார்க்க இயலவில்லை.
மொத்தத்தில் இரவுக்கு ஆயிரம் கண்கள் பார்ப்போருக்கு இமைகளை சிமிட்ட நேரமில்லை என்றே சொல்லலாம்.