பழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..


பழநி கோயில் சிலை மோசடி விவகாரத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் தலைமறைவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பழநி கோயிலில் உள்ள பழைமையான நவபாஷாண மூலவர் சிலைக்கு பதிலாக புதிய சிலை அமைக்க கடந்த 2004-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சில மாதங்களில் புதிய சிலை செய்யப்பட்டது. அந்தச் சிலை சில மாதங்களிலேயே நிறம் மாறிப்போனது. இதனையடுத்து அந்தச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டது. இந்தச் சிலை அமைக்க திருத்தணி முருகன் கோயிலிலிருந்து 10 கிலோ தங்கம் நன்கொடையாக வாங்கப்பட்டது.

மேலும் பக்தர்கள் பலரும் நன்கொடை வழங்கியுள்ளனர். சிலை அமைத்ததில் முறைகேடு நடந்தது 14 ஆண்டுகளுக்குப் பிறகு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்தபதி முத்தையா மற்றும் இணை ஆணையர் ராஜா ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். சிலை தயாரிப்புப் பிரிவில் இருந்த முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் தனபால், உதவி ஆணையர் அசோக் ஆகியோரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் தனபாலிடம் விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இரண்டு முறை சம்மன் அனுப்பியுள்ளனர். தனபால் ஆஜராகாததால், அவரின் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை செய்து, தனபாலைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாகியுள்ள தனபாலை கைது செய்ய அனைத்து முயற்சிகளும் எடுத்து வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறையில் உதவி ஆணையராகப் பணியில் சேர்ந்த தனபால், படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று அறநிலையத்துறையின் ஆணையராக கடந்த 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 2013-ம் ஆண்டு மே மாதத்துடன் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டிய தனபாலுக்கு மூன்று ஆண்டு பணிநீட்டிப்பு அல்லது மறு உத்தரவு வரும் வரை ஆணையர் பொறுப்பில் இருப்பார் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அரசுத் துறைகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தாம் ஆணையராக நியமிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், இந்து அறநிலையத்துறைக்கு, இந்து அறநிலையச் சட்டம் பிரிவு 9-ன்படி திருத்தம் மேற்கொண்டு கூடுதல் ஆணையரை ஆணையராகப் பதவி வகிக்கலாம் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி தனபால் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

ஆணையர் பொறுப்பில் இருந்த தனபால் மீது பல புகார்கள் முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்து விட்டதாக கோயிலின் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த முறைகேட்டிலும் தனபாலுக்குத் தொடர்பு இருப்பதாக ஒருசாரார் குற்றம் சாட்டினர்.

தமிழகம் முழுவதிலும் சுமார் 1,000 கோயில்களில் வருடம் தோறும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற உத்தரவையடுத்து ஆகமவிதிப்படி திருப்பணி எதையும் முடிக்காமல் கும்பாபிஷேகம் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஜெயலலிதாவின் முக்கிய திட்டமான கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்திலும் அதிக முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஒழுங்காக தனபால் விசாரிக்கவில்லை என்றும் புகார் எழுந்தது. இதுகுறித்து நேரடியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மேலும், சென்னை தியாகராய நகரில் தனியாருக்குச் சொந்தமான கோயில் ஒன்று உள்ளது. அவரை தனபால் மிரட்டி கோயில் சொத்துகளை அரசுக்குக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதில் பாதி பணத்தை எனக்குத் தர வேண்டும் என்று மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கோயிலில் நேரடி நியமனத்தில் ஒவ்வொருவரிடமும் அதிக அளவில் பணத்தை வாங்கிக் கொண்டு பணி வழங்கியதாகவும் குற்றச்சாட்டு வந்தது.

அவருக்குப் பிடிக்காத இணை ஆணையர் 7 பேர் மூன்று ஆண்டாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். துணை ஆணையர் 2 பேர், உதவி ஆணையர் 2 பேர், ஆய்வாளர் 13 பேர், செயல் அலுவலர் 25 பேரை சஸ்பெண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களும் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதினார்கள்.

அது மட்டுமல்லாமல் கோயில் நிலம் குத்தகையில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததில் இவர் பங்கு அதிகமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தனபால் மீது கூறப்பட்டது. இவரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வந்தது. இதையடுத்து 2016-ம் ஆண்டு மே மாதம் வரை இருந்த தனபாலின் பணி நீட்டிப்பு அவசர அவசரமாக நீக்கப்பட்டு, அப்போதைய தமிழகத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைச் செயலாளராக இருந்த எம்.வீரசண்முக மணி அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

பழநி கோயில் சிலை விவகாரத்தில் தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு தனபால் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில்; தற்போது தனபால் தலைமறைவாகியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தனபால் மனுதாக்கல் செய்துள்ளார்.

மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..

குளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு

Recent Posts