முதுகெலும்பு இல்லாத தமிழக அரசு’ என நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதை எதிர்த்தும், ஏற்கெனவே இருக்கும் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் கடந்த 100 நாட்களுக்கும் மேலாகத் தூத்துக்குடி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் ஒருபகுதியாக நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தச் சம்பவம் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
“போராட்டத்தில் ஈடுபட்ட சொந்த மக்களையே கொன்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. முதுகெலும்பு இல்லாத அரசு. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் அழுகுரல் கேட்கவில்லையா? சுற்றுச்சூழல் பாதிப்பால் மக்கள் வேதனைப்படுவது உங்களுக்கு முன்னரே தெரியாதா? இல்லை, ஆட்சியைப் பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு நடனமாடுவதில் பிஸியாக இருந்தீர்களா?” என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் பிரகாஷ் ராஜ்.