இல்லாத அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறார் ஆளுநர்: வேல்முருகன் கண்டனம்..


தன்னைப் பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டு சிறைத்தண்டனை என இல்லாத அதிகாரத்தை வைத்து ஆளுநர், மக்களை மிரட்டுகிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் ராஜ்பவனை முற்றுகையிட்ட போது கைதானார். மு.க.ஸ்டாலினுக்கு பதிலளிக்கும்விதமாக ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆளுநர் பணியில் குறுக்கிட்டால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இதற்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் பண்ருட்டி வேல்முருகன் ஆளுநரின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்னைப் பணி செய்யவிடாமல் தடுப்பவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124-ன்படி 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் ஆளுநர்.

இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் காட்டி தமிழக மக்களுக்கே விடும் மிரட்டல் மற்றும் எச்சரிக்கை இது. உண்மையில் அவர்தான் வரம்பு மீறி மாவட்ட ஆய்வினை மேற்கொள்வதன் மூலம் தமிழக அமைச்சரவையின் பணியையே கபளீகரம் செய்கிறார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாவட்டங்களுக்குச் சென்று, அங்கே மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளையும் கூட்டி விவாதித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இது அவரது பதவி சார்ந்த பணி அல்ல, ஆனாலும் வரம்பு மீறி இப்படி செயல்பட்டு வருகிறார். இதனைச் சுட்டிக்காட்டி தமிழக எதிர்க்கட்சிகளும் மக்களும் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆளுநரோ அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை, கண்டுகொள்ளவும் அவர் தயாரில்லை. ஆனால் தன்னைப் பணி செய்யவிடாமல் தடுப்பவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124-ன்படி 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

விருதுநகர் மாவட்டம் தேவங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தகாத செயலுக்கு அழைத்ததாக விசாரணையில் உள்ளார். அவர் மாணவிகளிடம் பேசியதாக வெளியான ஆடியோவில் ஆளுநரையும் குறிப்பிட்டதாக அவர் மீதும் புகார் எழுந்தது. தனக்கு எதிரான இந்தப் புகார் தொடர்பாக உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார் ஆளுநர்.

இப்படி விசாரணைக்கு உத்தரவிட அதிகாரம் இல்லாத நிலையிலும் அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக அதைச் செய்தார் ஆளுநர். இப்போதும் அப்படித்தான் தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் காட்டி, தன்னைப் பணி செய்யவிடாமல் தடுப்பவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124-ன்படி 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடுகிறார்.

இது, இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் காட்டி தமிழக மக்களுக்கே விடும் மிரட்டல் மற்றும் எச்சரிக்கையாகும். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனத்தைத் தெரிவிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

மாவட்டங்கள் தோறும் ஆளுநரின் ஆய்வு என்பது, மக்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசின் பணி, கடமை, உரிமை மற்றும் அதிகாரத்தில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் மரபுகளுக்கு மாறாகவும் தலையிடுவதாகும். கூட்டாட்சி முறை, மாநில சுயாட்சி மற்றும் ஜனநாயகத்தையே இழிவுபடுத்துவதாகும்.

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், உடனடியாக மத்திய அரசு அவரைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி’’ என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்

துருக்கி தேர்தல் : மீண்டும் அதிபரானார் எர்டோகன்..

மலேசிய அமைச்சரவையில் 5 தமிழர்கள்…

Recent Posts