Counselling starts to MBBS, BDS admissions
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது.
தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்களுக்கும், 10 சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 784 இடங்களுக்கும், 11 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 20 இடங்களுக்கும் சேருவதற்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வழங்கப்பட்டன.
இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 28ம் தேதி சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஒரு திருநங்கை விண்ணப்பம் உள்பட 27 ஆயிரத்து 417 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்றுமுதல் வரும் 10 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இன்று நடைபெறும் கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு, நீட் மதிப்பெண் சான்றிதழ், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ் இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டையைக் கொண்டுவர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.