நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பேசக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக மொழிபெயர்ப்பாளர்கள் குழுவை நாடாளுமன்றம் நியமித்துள்ளது.
இந்தியாவில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றில் அசாமி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு, ஒரியா, பஞ்சாபி, உருது ஆகிய 12 மொழிகளை ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பதற்கான வசதிகள் மாநிலங்களவையில் உள்ளன.
எனவே, மேற்குறிப்பிட்ட மொழிகளை தாய்மொழிகளாக கொண்ட மாநிலங்களவை உறுப்பினர்கள், தங்கள் கருத்துகளை தங்கு தடையின்றி முன்வைத்து வருகிறார்கள். எனினும், மீதமுள்ள 10 மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. இதனைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல உறுப்பினர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இந்தக் கோரிக்கையை ஏற்கும் விதமாக, டோங்ரி, காஷ்மீரி, கொங்கனி, சந்தாலி மற்றும் சிந்தி ஆகிய 5 மொழிகளையும் ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பதற்கான வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது. இதற்கான மொழிபெயர்ப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், போடோ, மைதிலி, மராத்தி, நேபாளி, மணிப்பூரி ஆகிய 5 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் மூலம், வரும் 18-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
உதாரணமாக, தமிழக மாநிலங்களவை உறுப்பினர் அவையில் தமிழில் பேசுகிறார் என்றால் அவர் பேசும்போதே, அதனை மொழிபெயர்ப்பாளர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கொண்டிருப்பார். இந்த ஆங்கில உரையை, மற்றொரு மொழிபெயர்ப்பாளர் இந்தியில் மொழிபெயர்த்து கூறுவார். இவ்வாறு, ஒருவரின் தாய்மொழி பேச்சு, ஒரே நேரத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். இதற்கு, மொழியை விரைவாக புரிந்துகொள்ளும் திறனும், அவற்றை வேகமாக மொழிபெயர்க்கும் ஆற்றலும் மிகவும் அவசியம்.
உரையை முடித்த உறுப்பினர் நன்றி வணக்கம் எனக் கூறும்போது மொழிபெயர்ப்பாளரும் ‘நன்றி வணக்கம்’ என கூறிவிடுவார். இந்த அளவிற்கு வேகமாக செய்யப்படும் மொழிபெயர்ப்பை, மற்ற உறுப்பினர்கள் இவ்விரு மொழிகளில் (ஆங்கிலம், இந்தி) ஒன்றை தேர்ந்தெடுத்து ‘ஹெட்போன்கள்’ மூலம் கேட்கலாம்.