தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த மார்ச் 11-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த 23 பேர் உயிரிழந்தனர்.
இந்த தீவிபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பாக விசாரிப்பதற்கு, பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து விசாரணையைத் தொடங்கிய அவர், விபத்து எப்படி ஏற்பட்டது, மலையேற்றப் பயிற்சிக்காக எப்படி அனுமதி வழங்கப்படுகிறது,
எத்தகைய விதிமுறை பின்பற்றப்படுகிறது, வனத்துறை சார்பில் ஏதேனும் தவறு நடந்துள்ளதா, மலையேற்றக் குழுவினர் ஏதேனும் தவறு செய்துள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்.
பாதிக்கப்பட்டவர்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணையை முடித்த விசாரணை அதிகாரி, அதன்பின்னர் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகம் வந்த விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, குரங்கணி தீ விபத்து தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதில் தீ விபத்துக்கான காரணங்கள் மட்டுமின்றி எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.