உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் ரூ.3558 கோடி இழப்பு; தமிழக அரசு பதவி விலக வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்…


உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த தமிழக அரசு தவறியதால் கடந்த ஓராண்டில் மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ரூ.3558.21 கோடி நிதி வழங்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது,

உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாவிட்டால் அரசு விலக வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில் ‘‘தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த தமிழக அரசு தவறியதால் கடந்த ஓராண்டில் மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ரூ.3558.21 கோடி நிதி வழங்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகள் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் இந்த நிதியை வாங்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18 ஆம் ஆண்டில் ரூ.3,340 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு 14-வது நிதி ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இதில் முதற்கட்ட அடிப்படை மானியம் ரூ.1390 கோடியை மட்டுமே கடந்த ஜனவரி வரை தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டுக்கான இரண்டாம் கட்ட அடிப்படை மானியம் ரூ.1390.04 கோடி, செயல்பாட்டு மானியம் ரூ.560.15 கோடி என மொத்தம் ரூ.1950.19 கோடியை கடந்த மார்ச் மாதத்திற்குள் மத்திய அரசு வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால், அதன்பிறகு 4 மாதங்களாகியும் நிதி ஆணையம் பரிந்துரைத்த நிதி வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, 2018-19 ஆம் நிதியாண்டிற்கான முதல்கட்ட அடிப்படை மானியம் ரூ.1608.02 கோடி இப்போது வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த நிதியையும் வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. பலமுறை நினைவூட்டியும் இந்த மானியம் இன்று வரை வழங்கப்படவில்லை.

கடந்த நிதியாண்டின் இரண்டாம் பாதி, நடப்பு நிதியாண்டின் முதல் பாதி என ஓராண்டில் மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.3558.21 நிதி மறுக்கப்பட்டிருப்பதால் உள்ளாட்சிகள் மிகக்கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இன்றைய சூழலில் ரூ.3558 கோடி என்பது தமிழகத்திற்கு மிகவும் அதிகமான தொகை ஆகும். ஏற்கனவே, 14&ஆவது ஆணையத்தின் பரிந்துரைகளில், மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கான பங்காக வழங்கப்பட வேண்டிய தொகை கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது.

அது போதாதென உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய மானியத்தையும் மத்திய அரசு நிறுத்தி வைத்தால் ஜனநாயகத்தின் ஆணி வேராக கருதப்படும் உள்ளாட்சி அமைப்புகள் கருகி விடும் வாய்ப்புள்ளது.

உள்ளாட்சிகளுக்கான நிதி வழங்கப்படாததன் பாதிப்புகள் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கிவிட்டன. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த ஆண்டு பெய்த சாதாரண மழையில் சேதம் அடைந்த சாலைகள் 9 மாதங்களாகியும் இப்போது வரை சரி செய்யப்படவில்லை. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிதி நெருக்கடி காரணமாக துப்புரவுப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை.

கோவை மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய ரூ.60 கோடி கிடைக்காததால், அங்கு பணியாற்றிய 500 துப்புரவு பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மதுரையில் துப்புரவு பணியாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. திருச்சி, வேலூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளும், மற்ற நகர, ஊரக உள்ளாட்சி அமைப்புகளும் மிகக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.

தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலைக்கு தமிழக அரசு தான் காரணம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் தான் இந்த நிதி வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு பலமுறை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலத்திற்கான ரூ.1950.19 கோடி பிப்ரவரி மாதம் வரை வழங்கப்படாத நிலையில், அதை உடனடியாக வழங்கும்படி அப்போதைய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமல் தமிழகத்திற்கு இனி ஒரு பைசா கூட நிதி வழங்க முடியாது அப்போதே மத்திய அரசு கூறிவிட்டது. இப்போது மக்களவையில் இதுகுறித்த வினாவுக்கும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் தோமர் இதே பதிலை கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததைக் காரணம் காட்டி இந்த நிதியை வழங்க மத்திய அரசு மறுத்ததாக செய்தி வெளியான போதே, தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, மத்திய அரசு நிதியை பெற வேண்டும் என்று கடந்த மார்ச் 23-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன்.

அப்போதே தமிழக அரசு விழித்துக் கொண்டிருந்தால் கூட, அதற்கு பிந்தைய 4 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி மத்திய அரசு நிதியை வாங்கியிருக்க முடியும். ஆனால், ஊழல் செய்வதில் மட்டும் ஆர்வம் காட்டும் அரசு, தோல்வி பயம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததே சிக்கலுக்கு காரணமாகும்.

தமிழக அரசு செய்த பாவத்தின் சுமைகளை தமிழ்நாட்டு மக்கள் சுமந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் அடுத்த இரு வாரங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு தேர்தலை நடத்த எந்தத் தடையும் இல்லை. எனவே, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, நிதியைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடத்த முடியாவிட்டால் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

அதேநேரத்தில் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டிற்கான நிலுவைத் தொகை ரூ.1950 கோடியையாவது மத்திய அரசு உடனே ஒதுக்க வேண்டும்’’ என ராமதாஸ் கூறியுள்ளார்.

புதுச்சேரி பட்ஜெட் முடக்கம்: துணை நிலை ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்…

மோடி அரசுக்கு கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது: சோனியா

Recent Posts