தி.மு.க. தலைவா் கருணாநிதியின் உடல்நிலை குறித்த எதிா்மறையான கருத்துகளை யாரும் வெளியிடக் கூடாது என்று நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் தொிவித்துள்ளாா்.
நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா். அந்த அறிக்கையில், தமிழகத்தின் முதுபெரும் அரசியல் ஆளுமையும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதியின் உடல்நலம் குறித்து எதிா்மறையான செய்திகளை சமூக வலைதளங்களில் நாம் தமிழா் கட்சியினா் என்ற பெயரில் இயங்கும் சிலா் பதிவிட்டு வருகிறாா்கள் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன். கருணாநிதியின் அரசியல் முடிவுகளோடும், தி.மு.க.வின் கொள்கை கோட்பாடுகளோடும் நமக்கு முரண்பாடுகளும், மாற்றுக்கருத்துகளும் இருக்கிறது என்பதில் மாற்றமில்லை. அரசியல் களத்தில் சமரசமின்றி தி.மு.க.வின் அரசியல் நடவடிக்கைகளை விமா்சித்தோம்.
தற்போது கருணாநிதியின் உடல் நலிவுற்ற நிலையில் அவரது உடல் நலனை முன்வைத்து விமா்சிப்பதையும், அதனை குறித்தும் எதிா்மறை கருத்துகள் தொிவிப்பதையும் ஒருபோதும் ஏற்க முடியாது. அது அரசியல் பண்பாடு கிடையாது. ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற சூழலில் அதனை தவறாக பேசியும் விமா்சனப் பதிவுகள் இட்டு பகிா்வதும் மிகவும் தவறான போக்காகும்.
தி.மு.க. தலைவா் கருணாநிதியின் உடல்நிலை தேறி மீண்டும் அவா் அரசியல் தளத்தில் பணியாற்ற வேண்டும் என்கிற எனது விருப்பத்தினை தொிவித்துக் கொள்ளும் இவ்வேளையில், இணையத்தில் இயங்கும் நம் உறவுகள் இது குறித்து மிகுந்த கவனம் கொண்டு கண்ணியத்தோடும், அரசியல் நாகரீக மாண்புகளோடும் செயல்படும்படி வலியுறுத்துகிறேன் என்று தொிவித்துள்ளாா்.