பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.24 ஆயிரம் கோடி மோசடி செய்து தப்பி ஓடிய மெகுல் சோக்ஸி குறித்து எந்தவிதமான குற்றச்சாட்டு பற்றியும், தவறான நடத்தை குறித்தும் மோடி அரசு, ஆன்டிகுவா அரசுக்குத் தெரிவிக்கவில்லை, அவர் தப்பிக்க பிரதமர் அலுவலகம் உதவியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி உறவினர் மெஹுல் சோக்ஸி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.24 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்குத் தப்பினார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சோக்ஸிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கினர்.
நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும், இன்டர்போல் அமைப்பு இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்த மெகுல் சோக்ஸி கடந்த மாத தொடக்கத்தில் கரீபியன் தீவான ஆன்டிகுவாவுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு அவர் அந்த நாட்டின் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் இன்டர்போல் அளித்த நோட்டீசுக்கு ஆன்டிகுவா அரசு பதில் தெரிவித்தது.
இந்நிலையில், மெகுல் சோக்ஸிக்கு குடியுரிமை வழங்கப்பட்டது தொடர்பான பல்வேறு தகவல்களை ஆன்டிகுவா அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இன்று வெளியிட்ட அறிக்கையில், ”பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.24 ஆயிரம் கோடி மோசடி செய்து தப்பிய மெகுல் சோக்ஸி இந்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி நாட்டைவிட்டு தப்பிச் சென்றார். அவர் மீது ஜனவரி 16-ம் தேதி சிபிஐ அமைப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மெகுல் சோக்ஸி கரிபீயன் தீவான ஆன்டிகுவா அரசின் குடிமகனாக ஜனவரி 15-ம் தேதி பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டே ஆன்டிகுவா மற்றும் பர்படா நாட்டின் குடியுரிமை கேட்டு மெகுல் சோக்ஸி விண்ணப்பம் செய்துள்ளார். மெகுல் சோக்ஸி மீது ஏராளமான புகார்களை குறிப்பிட்டுக் கடந்த ஆண்டு ஜூலை மாதமே பிரதமர் அலுவலக்துக்கு புகார்கள் சென்றன. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
மெகுல் சோக்ஸிக்கு குடியுரிமை வழங்கும் முன் ஆன்டிகுவா அதிகாரிகள், இந்திய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அவரின் நடத்தை குறித்தும், அவர் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்துள்ளனர்.
ஆனால், பிரதமர் அலுவலகம், வெளியுறவுத்துறை, சிபிஐ, செபி, ஆகியவை மெகுல் சோக்ஸி குறித்து எந்தவிதமான குற்றச்சாட்டையும், தவறான நடத்தைச் சான்றிதழும் அளிக்கவில்லை என்று ஆன்டிகுவா குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வங்கி மோசடி செய்த மெகுல் சோக்ஸி சுதந்திரமாக தப்பித்துச் செல்ல மோடி அரசு உதவியுள்ளது என்று தெரியவந்துள்ளது. ஆன்டிகுவா அரசின் இந்தத் தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. கொள்ளையடிப்பவர்களையும், அவர்களைத் தப்பிக்க வைத்தலையும் மோடி அரசு முதன்மைக் கொள்கையாக வைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஆன்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுனைச் சந்தித்த பிரதமர் மோடி மெகுல் சோக்ஸி விவகாரத்தை ஏன் எழுப்பவில்லை என்பது தெரியவேண்டும்.
மெகுல் சோக்ஸி மீது வங்கி மோசடிக் குற்றச்சாட்டுகள் இருக்கும் போது, அவருக்கு நன்நடத்தைச் சான்றிதழை வெளியுறவுத்துறை அளித்துள்ளது.
மேலும், மெகுல் சோக்ஸிக்கு எதிராக வலுவான ஆதாரங்களை இன்டர்போலிடம் அளித்து அவருக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
கடந்த 2015-ம் ஆண்டு மே 7 மற்றும் 26 தேதிகளில் இரு புகார்கள் பிரதமர் அலுவலகத்துக்கு வந்தபோதிலும் கூட அது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியுறவுத்துறை, சிபிஐ, அமலாக்கப் பிரிவு மற்றும் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு நிறுவனமான செபி ஆகியவற்றுக்கு நடவடிக்கை எடுக்கவோ, விசாரணை நடத்தவோ பரிந்துரை செய்யாதது ஏன்?” என்று ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.