கஜினிகாந்த் : திரை விமர்சனம்..
தமிழ் சினிமாவில் அடல்ட் கதை மூலம் தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் சந்தோஷ். எனக்கும் பேமிலி படம் எடுக்கவரும் என்று ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி சந்தோஷ் எடுத்திருக்கும் படம் தான் கஜினிகாந்த். சந்தோஷ் தன்னை நிரூபிக்கும் இடத்தில் இருக்க, ஆர்யாவோ ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றார், இருவரின் குறிக்கோளும் வெற்றிப்பெற்றதா? பார்ப்போம்.
கதைக்கரு
தர்மத்தின் தலைவன் படம் பார்க்கும் போது ஆர்யா பிறக்கின்றார். அதன் காரணமாக என்னவோ ஆர்யாவிற்கு மறதி கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.
இந்த மறதியால் ஆர்யா மிகவும் கஷ்டப்படுகின்றார், பிச்சைக்காரனுக்கு பைக் சாவியை கொடுக்கும் அளவிற்கு மறதி என்றால் பாருங்கள். இப்படி ஒரு மறதி நோயை வைத்துக்கொண்டு சாயிஷாவை பார்த்தவுடன் காதலிக்கின்றார்.
அதை தொடர்ந்து சாயிஷாவிடம் தன் மறதியை மறைக்கவும், சாயிஷாவின் தந்தை சம்பத்திடம் எப்படியாவது நல்ல பெயர் எடுத்து அவருடைய மகளை கரம் பிடிக்கவும் ஆர்யா படும்பாடே இந்த கஜினிகாந்த்.
படம் பற்றி ஒரு பார்வை
பாஸ் என்கின்ற பாஸ்கரன் படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஓரளவிற்கு நன்றாகவும் தன் பணியை செய்துக் கொடுத்துள்ளார். ஆனால், அதே நேரத்தில் பாஸ் என்கின்ற பாஸ்கரன், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் பார்த்து பழகி போன ஆர்யா தான் இந்த கஜினிகாந்திலும்.
ஆர்யாவிற்கு பக்க பலமாக சதீஷ், தமிழ் படம்-2வை தொடர்ந்து இதிலும் அவருடைய காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கின்றது. குறிப்பாக இரண்டாம் பாதியில் ஆள் மாறாட்டம் செய்யும் காட்சிகள் சிரிப்பு சரவெடி.
இவர்களை விட ஆர்யா மற்றும் அவருடைய தந்தையாக வரும் ‘ஆடுகளம்’ நரேன் கூட்டணி இன்னும் சிரிக்க வைக்கின்றது. சாயிஷா பார்க்க அழகாக இருக்கின்றார், ஆனால், நடிப்பதற்கு பெரிதும் வாய்ப்பு இல்லை.
படம் கலகலப்பாக சென்றாலும் அடுத்தடுத்த காட்சிகள் நாம் கணிக்கும் வகையிலேயே உள்ளது. அதை விட தெலுங்கில் ஒரிஜினல் பதிப்பை பார்த்து விட்டால், தமிழில் பார்க்க சுவாரஸ்யம் குறைவாக தான் இருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு அப்படியே காட்சி மாறாமல் எடுத்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி தான், செம்ம கலர்புல்லாக உள்ளது. இசை பெரிதும் ஈர்க்கவில்லை, பாடல்கள் ஏதும் மனதில் நிற்கவில்லை.
ப்ளஸ்
படத்தின் இரண்டாம் பாதி, செம்ம கலகலப்பாக செல்கின்றது.
ஆர்யா-சதீஷ்-நரேன் சம்மந்தப்பட்ட காட்சிகள் சிரிப்பிற்கு கேரண்டி.
மைனஸ்
யூகிக்க கூடிய காட்சிகள் அடுத்தடுத்து வருவது.
படத்தின் பாடல்கள் ஏதும் மனதை ஈர்க்கவில்லை, அத்தனை மறதியை வைத்துக்கொண்டு ஆர்யாவை ஒரு விஞ்ஞானி போல் காட்டியிருப்பது லாஜிக் ஓட்டை.
மொத்தத்தில் கஜினிகாந்த் சந்தோஷிற்கு குடும்ப படமும் எடுக்க வரும் என நிரூபித்துவிட்டார். பேமிலியுடன் கண்டிப்பாக இந்த சந்தோஷ் படத்தை பார்க்கலாம்.