வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : பாஜக நிகழ்ச்சிகள் ரத்து…


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக குழாய் நோய்த்தொற்று, சிறுநீர் பாதை நோய்த்தொற்று, மார்பு வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாஜ்பாயின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் மூத்த மந்திரிகள் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நிலை விசாரித்தனர்.

இந்நிலையில் நேற்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இன்று காலையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், ஜே.பி.நட்டா, முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்த வண்ணம் உள்ளனர்.

வாஜ்பாய் நலம் பெற வேண்டி பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனையும் செய்து வருகின்றனர். வாஜ்பாயின் சொந்த ஊரான குவாலியரில், அரசு ஆயுர்வேத கல்லூரி மாணவர்கள் யாகம் வளர்த்து பிரார்த்தனை செய்தனர். வாஜ்பாய் நலம் பெற வேண்டும் என பல்வேறு தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் பிரார்த்தனையை வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவமனை இன்று காலை வெளியிட்ட அறிக்கையிலும், வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உயிர்காக்கும் கருவிகள் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த செயற்குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் வாஜ்பாய் வீடு அமைந்துள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு வங்கக்கடலில் 18-ம் தேதி புதிய காற்றழுத்த நிலை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..

குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு ஞாயிறு முதல் தொடக்கம்…

Recent Posts