திருச்சி அருகே இடிந்துவிழும் நிலையில் உள்ள கொள்ளிடம் இரும்புப் பாலத்தை சீரமைக்குமாறு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், வெள்ளம் நின்ற பின்னர் அந்தப் பாலம் இடித்துத் தள்ளப்படும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மிகப்பழமையான இரும்புப்பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1924 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம், 1928 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில், உத்தரவாத ஆண்டுகள் முடிவடைந்து பாலம் வலுவிழந்ததால் அருகே புதிய பாலம் கட்டப்பட்டு, கடந்த 2016 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், வெள்ளப்பெருக்கின் வேகத்தாலும், மணல் அரிப்பினாலும் பாலத்தின் 18 ஆம் தூணில் விரிசல் ஏற்பட்டது. நீரின் வேகம் அதிகரித்த நிலையில், 21 மற்றும் 22 ஆம் தூண்களும் சேதமடைந்து பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்தப் பாலத்தை சீரமைக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தின் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், வெள்ளம் வடிந்த பின்னர் சேதமடைந்துள்ள கொள்ளிடம் இரும்புப் பாலம் இடித்து அகற்றப்படும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
Kollidam Iron Bridge In It’s last moment