லக்ஷ்மி திரை விமர்சனம்..
நடனப்புயல், இந்தியாவின் மைக்கல் ஜாங்சன் எனப் புகழப்படும் பிரபுதேவா நீண்ட இடைவேளைக்கு பிறகு தேவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, தற்போது அதே படத்தின் இயக்குனர் விஜய்யுடன் மீண்டும் பிரபுதேவா லக்ஷ்மி படத்தின் மூலம் இணைந்துள்ளார்.
பிரபுதேவா என்றாலே நடனம் தான், அந்த நடனத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ள லக்ஷ்மி ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.
கதைக்கரு
லக்ஷ்மி நின்றால் நடனம், நடந்தால் நடனம் என நடனத்தை மட்டுமே தன் வாழ்க்கையாக கொண்டு இருக்கின்றார். ஆனால், அவருடைய அம்மா ஐஸ்வர்யா ராஜேஷிற்கு மகள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பது விருப்பம்.
நடனம் என்றாலே வெறுக்கின்றார், அந்த நேரத்தில் யதார்த்தமாக ஒரு காபி ஷாப் வைத்திருக்கும் பிரபுதேவாவிடம் லக்ஷ்மிக்கு அறிமுகம் கிடைக்கின்றது.
லக்ஷ்மியை பிரபுதேவாவிற்கு பிடித்துப்போக அவரின் நடனத்திற்கு பணம் கொடுத்து உதவுகின்றார். ப்ரைட் ஆப் இந்தியா டான்ஸ் போட்டியில் லக்ஷ்மி சொதப்புகிறாள்.
அதனால் அவருடைய அணி வெளியேறும் நிலை வர, லக்ஷ்மி இனி நடனமாட முடியாது என்கின்றனர் மாஸ்டர். அதை தொடர்ந்து லக்ஷ்மிக்கு ஆதரவாக பிரபுதேவா செல்ல அங்கு அனைவரும் அவரை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். அந்த ஆச்சரியத்திற்கான காரணம் என்ன, லக்ஷ்மி வெற்றி பெற்றாளா என்பதே மீதிக்கதை.
படம் பற்றி ஒரு பார்வை
இந்த வயதில் இப்படி நடனமாடும் பெண்ணா என்று காட்சிக்கு காட்சி நம்மை பிரமிக்க வைக்கின்றார். லேடி குட்டி பிரபுதேவா என்ற பட்டத்தை கொடுக்கலாம். தனக்கு காசு தரவில்லை என்று இந்த கடையில் சாப்பிட்டால் புட் பாயிஷன் ஆகும் என பிரபுதேவாவை கலாய்க்கும் இடத்திலும் நடிப்பிலும் ஸ்கோர் செய்கின்றார்.
பிரபுதேவா ஆல்ரெடி ஹிந்தியில் ABCD படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான், அதே போல் தான் இதிலும், தனக்கே உரிய யதார்த்தமான நடிப்பில் கவர்கின்றார்.
டான்ஸ் படம் என்றாலே போட்டி, பொறாமை ஜெயிப்பதற்கு எந்த லெவல் வேண்டுமானாலும் செல்வது போல் காட்டுவார்கள். ஆனால், இதில் கடைசி வரை பாசிட்டிவிட்டி தான்.
நடனத்தின் போது ஆணியினை கொட்டும் எதிரணியை கூட எளிதாக மன்னித்து விடுகிறார்கள் குழந்தைகள். படத்தில் வில்லன் என்று நினைப்பவர் கூட, அட இவரும் நல்லவர் தான்பா என்று கிளைமேக்ஸில் சொல்ல வைத்து விடுகின்றனர். இது ரசிக்க வைத்தாலும் இதுவே போட்டியின் வலிமையையும் குறைக்கின்றது.
படத்தில் பிரபுதேவா, லக்ஷ்மி தாண்டி நம்மை மிகவும் கவர்வது ஒரு குண்டு தம்பி தான். லக்ஷ்மியை இம்ப்ரஸ் செய்வது, கடைசியாக ஆணியில் விழுந்து சக போட்டியாளரை காப்பாற்றுவது என சூப்பர்டா தம்பி.
இயக்குனர் விஜய் படம் என்றாலே மற்ற படங்களுடன் கம்பேர் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த லக்ஷ்மியை பல படங்களுடன் கம்பேர் செய்யலாம், பாலிவுட்டில் வெளிவந்த ABCD, ஹாலிவுட்டில் வந்த ரியல் ஸ்டில் போன்ற படங்களின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
லக்ஷ்மியின் மறைமுக ஹீரோ இசையமைப்பாளர் சாம் தான், டான்ஸ் படத்திற்கு என்ன தேவையோ அதை முழுவதுமாக கொடுத்துள்ளார். நமக்கே எழுந்து நடனமாடும் வகையில் தாளம் போட வைக்கின்றது.
ப்ளஸ்
லக்ஷ்மி கதாபாத்திரம், டித்யா பாண்டே இவரை தவிர வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்தை இத்தனை அழகாக செய்திருக்க முடியாது.
படத்தின் நடன காட்சிகள், இதை அமைத்தவரை கைத்தட்டி பாராட்டலாம், அதிலும் கிளைமேக்ஸில் பிரபுதேவாவிற்கும் டித்யாவிற்குமான காட்சிகள் சூப்பர்.
படத்தின் இசை, கதைக்கு தேவையான வகையில் அமைந்துள்ளது.
மைனஸ்
இதற்கு முன் வந்த பல நடன படங்களின் சாயல் மிகவும் தெரிகின்றது.
பிரபுதேவா-ஐஸ்வர்யா ராஜேஸ் குறித்த உறவு இன்னும் வலுவானதாக அமைத்திருக்கலாம்.
மொத்தத்தில் இந்த லக்ஷ்மியின் நடனத்திற்காக இல்லை, நடனம் என்ற சொல் உங்களுக்கு பிடித்தாலே கண்டிப்பாக இந்த படத்திற்கு விசிட் அடிக்கலாம்.