பெட்ரோல் நிலையங்களில் பிரதமர் மோடியின் படத்தைக் கட்டாயம் வைக்க வேண்டும் என்று பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை பெட்ரோல் டீலர்களுக்கு இத்தகைய வாய்மொழி உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவு குறித்து இந்திய பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.கோகி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பெட்ரோல் நிலையங்களில் வைக்குமாறு உத்தரவிடுகின்றனர்.
இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு சப்ளை நிறுத்தப்படும் என்ற மறைமுக அச்சுறுத்தலும் விடுக்கப்படுகிறது” என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஏரியா அதிகாரிகள் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு எல்பிஜி இணைப்பு வழங்கும் திட்டத்தை குறிப்பிட்டு ஒரு படம் வைக்க வேண்டும் என்ற உத்தரவே அது.
நிறுவனங்களின் பிராந்திய அதிகாரிகளிடமிருந்தோ, விற்பனை அதிகாரிகளிடமிருந்தோ எழுத்து பூர்வமாக இது குறித்த உத்தரவு இல்லை. என்கிறார் கோகி.
பெட்ரோல் நிலைய ஊழியர்களின் சுயவிவரம் கேட்பு:
சமீபத்தில் பெட்ரோல் நிலையங்களில் பணியாற்றுவோரின் சுயவிவரங்களை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கேட்டதாகவும் ஆனால் அதனை அளிக்க பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு மறுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர், ஊழியர்களின் சுய விவரங்களை வைத்துக் கொண்டு அவர்களை சாதி, மதம் ரீதியாக பிரித்து கணக்கெடுக்க முடிவு எடுப்பதாக சந்தேகத்ததால் விவரங்களை அளிக்க மறுக்கப்பட்டுள்ளதாக சில டீலர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் மாதம் டீலர்களுக்கு ஒரு படிவம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “பாதுகாக்கப்பட வேண்டிய சொந்த விவரங்களான சாதி, மதம், ஊழியர்களின் தொகுதி ஆகியவை குறித்த விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களை யார் கேட்டாலும் அது தனியுரிமையை மீறுவதாகும் ஆனால் அரசே கேட்கிறது. நாங்கள் நீதிமன்றம் செல்லவிருக்கிறோம்” என்றார் கோகி.
படிவத்தில் திருமணமானவரா இல்லையா, மொபைல் எண், தந்தை அல்லது காப்பாளர் பெயர், ஆதார் எண், மதம், சாதி, தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி, அனுபவம், கல்வித்தகுதி ஆகியவையோடு வங்கி கணக்கு விவரங்களையும் கேட்டுள்ளது.
இதனையடுத்து ஜூன் 11-ம் தேதி பெட்ரோலிய டீலர்கள் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதி இந்த முயற்சி அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். பஞ்சாபின் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கூட்டமைப்பு ஐ.ஓ.சி.எல்., ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் மூத்த செயலதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஆனால் பெட்ரோலிய நிறுவன அதிகாரி ஒருவர் இது குறித்து கேட்ட போது, சுயவிவரங்களைக் கேட்டதாக ஒப்புக் கொண்டனர், ஆனால் பிரதமரின் திறன் வளர்ப்பு அமைச்சகத்துக்காகக் கேட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து வியாழனன்று அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கு பெட்ரோலிய நிறுவனங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.