மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து பரிந்துரை செய்ய ஏற்படுத்தப்பட்ட நிதிக்கமிஷன் மாநிலங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநிலங்களின் உண்மையான தேவைகள், தனித்தன்மை வாய்ந்த பிரச்சினைகள் போன்றவற்றை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அந்த வகையில் 15வது நிதிக்கமிஷன் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இன்று 06.09.2018 தமிழக அரசு அதிகாரிகளுடன் நிதிக் கமிஷன் ஆலோசனை நடத்துகிறது. முன்னதாக சென்னையில் நேற்று காலை அரசியில் கட்சித் தலைவர்களை சந்தித்து நிதிக்குழு அவர்களது கருத்துகளை கேட்டறிந்தது. பிற்பகலில் அரசு அலுவலர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களிடம் அவர்கள் கருத்துகளை கேட்டறிந்தது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதிக்கமிஷனின் தலைவர் டாக்டர் என்.கே. சிங், துறை சார் நிபுணர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் மற்றும் ஆலோசனைக்கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக கூறினார். இந்த கலந்துரையாடல்கள் மூலம் தங்களுக்கு நல்ல புரிதல் ஏற்பட்டதாகவும், இதன் மூலம் கமிஷன் தனது பரிந்துரைகளை செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய தமிழ்நாட்டின் உண்மையான தேவைகள் குறித்து தெரிந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் மற்றும் அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை கையாளும் முறைகளை எவ்வாறு வலுப்படுத்துவது என்றும் நிதிக்கமிஷன் பரிந்துரைகளை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மாவட்டங்களில் நிலவும் வேறுபாடுகள், திட்டமிடா நகரமயமாக்கல் அதன்காரணமாக ஏற்படும் இடப்பெயர்வு, ஊரகப்பகுதிகளுக்கிடையேயும், நகர்புறங்களுக்கிடையேயும் பாகுபாடுகளை விளக்கும் விதமாகவும் ஆலோசனைகள் நடைபெற்றதாகவும், மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நீர்நிலைகளை புதுப்பித்தல், நவீன உத்திகள் மூலம் சிறந்த நீர் மேலாண்மைக்கு வழிவகுப்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெற்றன என்றும் டாக்டர் சிங் தெரிவித்தார்.
15 th Finance commition review Tamilnadu’s issues